வாக்குச்சாவடி மையத்தில் இருந்து சிபிஎம் வேட்பாளர் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்: போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் 12வது வார்டு சிபிஎம் வேட்பாளரை, வாக்குச்சாவடியில் வைத்து போலீசார் தாக்கியதாக கூறி தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 வார்டுகளில் போட்டியிடுகிறது. இதையொட்டி 12வது வார்டில் சிபிஎம் சார்பில் சூரியபாரதி (26) போட்டியிடுகிறார். வாக்குப்பதிவு தினமான நேற்று காலை முதல் நெசவாளர்கள் நிறைந்த பகுதியான சிஎஸ்எம் தோப்பு தெருவில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.இந்நிலையில் வாக்குச்சாவடி மையத்தில் வேட்பாளர் மற்றும் அவர் பரிந்துரை செய்பவர் இருக்கலாம் என கூறப்பட்டு இருந்தது. ஆனால், பொதுமக்களை தவிர்த்து யாரும் உள்ளே இருக்க கூடாது என போலீசார் வாக்குச்சாவடி மையத்தில் இருந்த சிபிஎம் கட்சி வேட்பாளர் சூரியபாரதியை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர். அதற்கு வேட்பாளர், உரிய காரணம் கூற வேண்டும் என போலீசாரிடம் கேட்டார். ஆனால் போலீசார், எவ்வித பதிலும் கூறாமல், வாக்காளர்கள் முன்னிலையில் வேட்பாளர் சூரியபாரதி, அவரது ஆதரவாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வாக்குச்சாவடி மையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதையடுத்து வேட்பாளர் சூரியபாரதி, வாக்குச்சாவடி மையத்தின் வாசலில் அமர்ந்து போலீசாருக்கு எதிராக கோஷமிட்டு சாலையில் படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை, போலீசார் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தனர். அதில் வேட்பாளருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், காஞ்சிபுரம் எஸ்பி சுதாகரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதில், சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, வாக்குச்சாவடி மையத்தில் வரையறுக்கப்பட்ட இடத்தில் யாரும் பிரசாரம் செய்யக்கூடாது. ஆனாலும், சம்பந்தப்பட்ட வேட்பாளர், அவரது ஆதரவாளர்கள் வாக்குச்சாவடி மையத்தின் வாசலிலேயே பொதுமக்களிடம் பிரசாரம் செய்ததால் அங்கிருந்து அவர்களை வெளியேற்றினோம் என்றனர்….

Related posts

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!

84 நீர்நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுக்க அனுமதி: அரசிதழில் வெளியீடு