வாக்குச்சாவடி இடமாற்றம் கண்டித்து தூத்துக்குடி அந்தோணியார்புரம் பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அந்தோணியார்புரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை வேறு பகுதிக்கு மாற்றியதால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக ஊர் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அந்தோணியார்புரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை (வாக்குச்சாவடி எண் 155) 2 கி.மீ தூரத்தில் உள்ள திரவியபுரம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு அந்தோணியார்புரம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இரவு ஊர்த்தலைவர் மிக்கேல் ஜெபமாலை தலைமையில் செயலாளர் அந்தோணி தஸ்நேவிஸ் முன்னிலையில் ஊர்ப்பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அந்தோணியார்புரம் நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியை தற்போது 2 கி.மீ தூரத்தில் உள்ள ம.திரவியபுரத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து 2 முறை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை எனவே ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அந்தோணியார்புரம் ஊர் மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்து டிஜிட்டல் போர்டு வைத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:  ‘மறவன்மடம் ஊராட்சிக்குட்பட்ட அந்தோணியார்புரத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தல் வரை வாக்குச்சாவடி மையம் செயல்பட்டு வந்தது. கடந்த 16.11.2020 அன்றைய வாக்காளர் பட்டியல்படி 867 வாக்காளர்கள் உள்ளனர். இது தவிர கோரம்பள்ளம் ஊராட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரும் இங்கு வாக்களித்து வந்தனர். தற்போது இந்த வாக்குசாவடி திரவியபுரத்திற்கு மாற்றிவிட்டனர். எங்கள் ஊர் ஆர்.சி நடுநிலைப்பள்ளியில் 2 கட்டிடங்கள் உள்ளன. எனவே இங்கேயே வாக்குச்சாவடி அமைத்து தரவேண்டும். இல்லையெனில் சுமார் 1300 வாக்காளர்கள் தேர்தலை புறக்கணிப்போம்’ என்றனர்….

Related posts

திருவாரூர் கோட்டக்கச்சேரியில் மின்சாரம் தாக்கி பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

ஒரு முறை அமைத்தால் 20 ஆண்டுகளுக்கு பலன் பசுமைக்குடில் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

இருவழிப்பாதை ஒரு வழியாக மாற்றம் பள்ளிபாளையத்தில் போக்குவரத்து நெரிசல்