வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்க தமிழகத்தில் 3.62 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், தமிழகத்தில் இதுவரை 3.62 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இந்த பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆதார் விவரங்களை வாக்காளர்கள் படிவம் 6பி என்ற படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் நேரடியாகவோ அல்லது NVSP, VHA என்ற ஆன்லைன் மூலமோ வழங்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி 1.8.2022 தொடங்கி 31.3.2023 வரை (8 மாதம்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களே வீட்டுக்கு நேரடியாக வந்து, விண்ணப்ப படிவத்தை வழங்கி, வாக்காளர்களின் பூர்த்தி செய்து வருகிறார்கள். ஆனாலும் தமிழகத்தில் இந்த பணி மிகவும் மந்தமாகவே நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்கம் செய்வதற்காக இந்த மாதம் நடைபெற்ற 4  சிறப்பு முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க அதிகம் பேர் விண்ணப்பம் செய்தனர்.இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் பேர் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க பதிவு செய்துள்ளனர். இது 58.73 சதவீதம் ஆகும். இவர்களில் 90 சதவீதம் பேர் வாக்குச்சாவடி அலுவலர்கள் வழியாக பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 84.9 சதவீதம் பேரும், அரியலூர் மாவட்டத்தில் 84.3 சதவீதம் பேரும் தங்கள் ஆதார் எண்ணை அளித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 9ம் தேதி முதல் வருகிற டிசம்பர் மாதம் 9ம் தேதி வரை சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது அதிகம் பேர், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்புள்ளது. குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 22 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண் அளித்துள்ளனர். இந்த பணி 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும்’’ என்றார்….

Related posts

கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி

உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயணம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு