வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்துவது ஏன்?: பிரதமர் மோடி விளக்கம்

அகமதாபாத்: ‘வாக்குகளை பெறுவதற்காக வளர்ச்சி பணிகளை செய்யவில்லை. மக்களின் வாழ்க்கை முன்னேறத்துக்காக செய்கிறேன்,’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தில் நவ்சாரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் உள்ளனர். பழங்குடியின மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரூ.3050 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த திட்டப்பணிகளை நேற்று தொடங்கி வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஏஎம் நாயக் சுகாதார மையத்தையும்  பிரதமர் தொடங்கி  வைத்தார். தொடர்ந்து குஜராத்தின் பெருமையை விளக்கும் வகையில் நடைபெற்ற குஜராத் கவுரவ் அபியான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  இதில் பிரதமர் மோடி பேசியதாவது; மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவோ,  தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவோ வளர்ச்சி பணிகளை தொடங்கவில்லை. மக்களின்  வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இவற்றை செய்கிறேன். நாட்டின் சுகாதார துறையை முழுமையான அணுகுமுறையால் மேம்படுத்துவதற்கு முயற்சிக்கிறோம். குஜராத் முதல்வராக இருந்த எனது அனுபவம் நாட்டின் சுகாதார கொள்கையை வடிவமைப்பதற்கு உதவியது.பல ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை.  கடின உழைப்பு தேவை என்பதால் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு அவர்கள் முன்வரவில்லை. கடந்த காலங்களில் சரியான சாலை வசதி கூட கிடையாது. முன்பெல்லாம் பழங்குடியினர் வசிக்கும் வன பகுதிகளில் தடுப்பூசி செலுத்த வேண்டும் போன்ற பிரசாரங்களை மேற்கொள்வதற்காக செல்வதற்கு பல மாதங்கள் காலதாமதமாகும்.  ஆனால், தற்போதைய காலகட்டத்தில் நகரங்களை போலவே பழங்குடியின மக்களும் கவனத்தில் கொள்ளப்படுகின்றனர். ஒரு சேர இங்கேயும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு

சித்தராமையா மனைவிக்கு நில ஒதுக்கீடு உத்தரவு ரத்து

கேரள கவர்னர் ஆடையில் தீ பிடித்ததால் பரபரப்பு