வளம் பெறும் தமிழகம்

2007 ம் ஆண்டு அடிக்கல் நாட்டிய திட்டம். 2009ல் பணிகள் ஆரம்பிக்க 2011ல் வந்த ஆட்சி மாற்றத்தால் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இப்போது மீண்டும் புத்துயிர் பெற்று இருக்கிறது நவீன வசதிகளுடன். ஆம் துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தான் இன்று இரண்டு அடுக்கு உயர் மட்ட சாலையாக உருமாறி இருக்கிறது. சென்னை துறைமுகத்துக்கு பெரும்பாலான சரக்குகள் பெரும்புதூரில் இருந்துதான் செல்கின்றன. ஏராளமான கன்டெய்னர்கள் அடங்கும். வாகன தயாரிப்பு தொழில் மையமாக பெரும்புதூா் இருக்கிறது என்றால் அதற்கு இன்னொரு வசதி சென்னையில் உள்ள துறைமுகங்கள். எளிதான சரக்கு போக்குவரத்து வசதி இருப்பதால் வளம் கொட்டியது. ஆனால் காலத்தின் அதிவேக வளர்ச்சியால் துறைமுகம் முதல் மதுரவாயல் செல்லும் சாலை போக்குவரத்து நெரிசலால் திணறியது. அதை சமாளிக்க கலைஞர் ஆட்சியில் உருவான திட்டம் தான் துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்ததும் மின்னல் வேகத்தில் பணிகள் நடந்தன. கூவம் ஆற்றின் ஓரமாக 19.5 கிமீ தூரத்திற்கு ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டன. ஆனால் 2011ல் அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதால் பணிகள் தடைபட்டன. இந்த பறக்கும் சாலை 14 கிமீ கூவம் ஆற்றுப்பகுதியில் செல்கிறது என்ற காரணத்தை கூறி சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்தது அதிமுக அரசு. பணிகள் முற்றிலும் முடங்கி விட்டன. ஆனால் இன்றும் அன்று கட்டிய தூண்கள் அதே பலத்துடன் நிற்கின்றன. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இந்த திட்டம் குறித்து ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி வசம் தெரிவிக்கப்பட்டது. அவரும் ஆலோசனை மேற்கொண்டு ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பில் 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு துறைமுகம்-மதுரவாயல் இடையே இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்க புதிய திட்டத்தை வகுத்து கொடுத்தார். 2021ல் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் இந்த திட்டம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 20.565 கிமீ தூரத்திற்கு ரூ.5855 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலையாக இந்தப்பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் செல்லும். வாகனங்கள் ஏறி, இறங்கி தங்கள் பகுதிகளுக்கு செல்ல வசதியாக 13 இடங்களில் சாய்தள வசதி அமைக்கப்பட உள்ளது. இரண்டாவது அடுக்கில் துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான கனரக வாகன போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்படும். மீண்டும் புத்துயிர் பெற்றுள்ள இந்த திட்டத்தால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும். துறைமுகத்துக்கு 24 மணி நேரமும் கன்டெய்னர்கள் செல்லலாம். ஆனால் 2009ல் இந்த திட்டம் ரூ1815 கோடிக்கு மதிப்பிடப்பட்டது. இப்போது இரண்டு அடுக்கு சாலையாக ரூ.5,855 கோடிக்கு மதிப்பிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் அதிமுக தட்டிக்கழித்ததால் இத்தனை இழப்பு. இருப்பினும் ஒப்பந்தம் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த பணியை விரைவுபடுத்தும் போது,நவீன வசதிகளுடன் இரண்டு அடுக்கு மேம்பாலம் அமையும் போது நிச்சயம் தமிழகம் வளம் பெறும்….

Related posts

மீண்டும் ஒரு கேலிக்கூத்து

முக்கிய சந்திப்பு

குற்றம் குற்றமே..!