வளத்தியிலிருந்து மேல்மலையனூருக்கு மினி பேருந்துகள் இயக்கப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து கடும் பாதிப்பு போலீசார் சமரச பேச்சுவார்த்தை

மேல்மலையனூர், அக். 15: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் அமாவாசை தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண கூடுவது வழக்கம். இந்நிலையில் புரட்டாசி அமாவாசை தினத்தில் அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்ததால் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு புதிய வழித்தடங்கள் உருவாக்கி அவ்வழியாக தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் ஈயக்குனம் கூட்ரோடு அருகே உள்ள தற்காலிக பேருந்து நிறுத்தம் வரை பேருந்து சேவை நிறுத்தப்பட்ட நிலையில் அங்கிருந்து பக்தர்கள் உள்ளூர் ஆட்டோக்கள் மூலம் வள்ளலார் மடம் வரை சென்று அங்கிருந்து திருக்கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் திடீரென 3 தனியார் பேருந்துகள், வழித்தட உரிமமின்றி பயணிகளை வளத்தியிலிருந்து மேல்மலையனூர் வரை அழைத்து சென்றதால் அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மேல்மலையனூர்-வளத்தி சாலையில் தனியார் பேருந்தை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வளத்தி போலீசார், மினி பேருந்தை வளத்தி காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களிடம் இனி மினிபேருந்து இயக்கப்படாது என உறுதியளித்ததன் பேரில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்