வலையில் வலுவாக சிக்கிய மீன்கள்-ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம் : பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடித்து திரும்பிய படகுகளில் அதிகளவில் மீன் வரத்து இருந்ததால், ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது, படகுகள் சிறைபிடிப்பு போன்ற பிரச்னைகளால் கடந்த சில நாட்களாக பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடித்தொழில் செய்து வரும் ராமேஸ்வரம் மீனவர்கள் முழுவீச்சில் தொழிலில் ஈடுபட முடியவில்லை. இதனால் மீன்வரத்து குறைவாக இருந்தது. போதிய அளவிற்கு மீன்கள் கிடைக்காததால் வருவாயும் குறைந்தது. மீனவர்கள் நஷ்டத்தையும் சந்தித்து வந்தனர்.நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்றனர். இரவு முழுவதும் மீன் பிடித்து நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பினர். கரை திரும்பிய படகுகளில் இறால் மீன்கள், வாளை, கட்டா, பேச்சாளை உட்பட பலவகையான மீன்கள் அதிகளவில் சிக்கியிருந்தன.படகுகளில் இருந்து கரைக்கு கொண்டு வரப்பட்ட மீன்களை வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். பிடித்து வரப்பட்ட மீன்கள் நல்ல விலைக்கு போனதால், கடந்த சில நாட்களாக நஷ்டத்தை சந்தித்து வந்த மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மீன்பாடு அதிகளவில் இருந்ததால் மீனவர்கள் மீன்களை இறக்குவது, வாகனங்களில் ஏற்றுவது, விற்பனை என ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் நேற்று மிகவும் பரபரப்பாக காணப்பட்டது….

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!