வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் 7 தற்காலிக உண்டியல் திறப்பு

வலங்கைமான், ஜூன் 15: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி வரதராஜம்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இது சக்தி ஸ்தலம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். பாடை காவடி திருவிழா அன்று, இறந்தவர்கள் போல பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்று பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இதேபோல ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளிலும், தெப்போற்சவ விழாக்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில் பக்தர்கள் கோயிலில் காணிக்கை செலுத்தும் வகையில் 6 நிரந்தர உண்டியல்கள், மேலும், கோயிலில் 40 பஸ் குலுக்கள் உண்டியல்களும் உள்ளன. இவை தவிர, விழா காலங்களில் கூடுதலாக தற்காலிக உண்டியல்கள் அமைப்பது வழக்கம். மேலும் நிரந்தர உண்டியல்கள் அறநிலையத்துறை உதவி ஆணையர் முன்னிலையிலும், பஸ் குலுக்கல் உண்டியல்கள் செயல் அலுவலர் முன்னிலையிலும் திறக்கப்பட்டு காணிக்கை கணக்கிடுவது நடைமுறையில் உள்ளது.

இதற்கிடையே இந்தாண்டு மார்ச் 24ம் தேதி தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பாடை காவடி திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் நிரந்தர உண்டியல்களில் செலுத்திய காணிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறநிலையத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் கணக்கிடப்பட்டது ஆனால் பாடை காவடி திருவிழா, பல்லக்கு தினத்தன்று பக்தர்கள் காணிக்கை செலுத்தும் விதமாக கூடுதலாக அமைக்கப்பட்ட 7 தற்காலிக உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை கணக்கிடப்படவில்லை. இந்த உண்டியல்களையும் திறந்து கணக்கிட வேண்டும் என்று கடந்த 2ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.

தினகரன் செய்தி எதிரொலியாக, கோயில் திருவிழாவின் போது அமைக்கப்பட்டிருந்த 7 தற்காலிக உண்டியல்களை எண்ணும் பணி திருவாரூர் உதவி ஆணையர் மணவழகன், செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் தமிழ்மணி ஆகியோர் முன்னிலையில் நேற்று எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள், ஆசிரியர்கள், ஐயப்பா சேவா சங்கத்தினர் மற்றும் தெருவாசிகள் கலந்து கொண்டனர். இதில் ரூ.7 லட்சத்து 74 ஆயிரத்து 178 ரொக்கம், 27 கிராம் தங்கம் மற்றும் 172 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை