வலங்கைமான் தாலுகாவில் கோடைநெல் நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் மும்முரம்

வலங்கைமான், ஏப்.11: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவில் சம்பா சாகுபடியைப்போன்று கோடை நெல் சாகுபடியிலும் ஆட்கள் பற்றாக்குறையினை சமாளிக்கும் விதமாக வட மாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வலங்கைமான் தாலுக்காவில் நடப்பாண்டு 8 ஆயிரத்து 950 ஹெக்டேரில் சம்பாவும், சுமார் நான்காயிரம் எக்டேரில் குறுவை அறுவடைக்குப் பின் மேற்கொள்ளக்கூடிய தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இவை அறுவடைப் பணிகள் முடிவுற்றள்ள நிலையில் கோடை சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. வலங்கைமான் தாலுக்காவில் சுமார் 6000 ஏக்கர் நிலப்பரப்பில் கோடை நெல் சாகுபடி மேற்கொள்ள படுகின்றது.

குறுகிய கால நெல் ரகங்களான கோ51 உள்ளிட்ட நெல் ரகங்களை நெல் சாகுபடி செய்து வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி நேரடி விதைப்பு இயந்திரம் நடவு கை நடவு ஆகிய முறைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வலங்கைமான் தாலுக்காவில் கோடை நெல் சாகுபடியில் தொழூவூர், சந்திரசேகரபுரம், பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் விளைநிலங்கள் சேற்று உழவு செய்து நேரடி விதைப்பு செய்யப் பட்டுள்ளது. முன்னதாக கட்டுமான பணிகள் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த வட மாநில தொழிலாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக வேளாண்மை பணிகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி காலங்களில் ஆட்கள் பற்றாக்குறை சமாளிக்கும் விதமாக வட மாநில தொழிலாளர்களை ஈடுபடுத்தி வந்த நிலையில் தற்போது வலங்கைமான் தாலுகாவில் பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்கள் தட்டுப்பாட்டினை தவிர்க்கும் விதமாக வலங்கைமான் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் கோடை நெல் சாகுபடி பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பணியில் ஆட்கள் நாற்றுகளை பறிப்பதும், பெண்கள் நடவு செய்வதுமே நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் வட மாநில தொழிலாளர்கள் பாலின பாகுபாடு இன்றி ஆண், பெண் தொழிலாளர்கள் இருவரும் நாற்றுகளைப் பறித்து இருவருமே நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி