வறுமையில் வாடி முடங்காமல் திறமைகளை வெளிபடுத்திய சகோதரிகள்: பல போட்டிகளில் பதக்கங்கள் குவிப்பு; உதவிக்கரம் நீட்ட அரசுக்கு கோரிக்கை

சென்னை: உத்திரமேரூர் அருகே வறுமையில் இருந்தாலும், தங்களது திறமைகளை வெளிப்படுத்திய சகோதரிகள், பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளனர். அவர்களின் திறமையை உலகம் அறிய செய்ய, அரசு உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே மிளகர்மேனி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஏழுமலை. இவரது மனைவி மேகலா. இவர்களுக்கு கீர்த்திகா (19), நிஷா (17) ஆகிய மகள்கள் உள்ளனர். இதில் கீர்த்திகா, பிஏ பொருளாதாரம் படிக்கிறார். கீர்த்திகா, தடகள போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கால்பந்து போட்டியிலும் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆனால், குடும்ப வறுமை காரணமாக இவரால் விளையாட்டை தொடர முடியவில்லை.அதேபோல் நிஷா பிளஸ் 2 படிக்கிறார். இவரும் தடகள வீராங்கனை. மாவட்ட, மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவில் பல போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்துள்ளார். கடந்த மாதம் நேபாளத்தில் நடந்த 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவராலும், விளையாட்டை தொடர முடியவில்லை. அந்த நேரத்தில் உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் முயற்சியால் அரசு பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் நேபாளத்தில் வெற்றி வாகையை நிஷா சூடினார். இதுகுறித்து ஏழுமலை கூறுகையில், கூலித் தொழிலாளியான நான், குடும்பத்தை ஓட்டுவதே சிரமம். அப்படி இருக்கையில் எப்படி மகள்களின் விளையாட்டில் கவனம் செலுத்த முடியும். ஆனாலும் பல போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்துள்ளனர். அதனால் எப்படியாவது தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான பொருளாதார உதவியை பலரிடம் நாடியுள்ளேன். அவர்களும் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். அரசும் உதவி செய்தால், எனது மகள்கள் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.பொருளாதார சூழ்நிலையால் கிராமங்களில் வசிக்கும் இதுபோன்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு உதவிக்கரம் நீள வேண்டும். அப்படி அவர்களை உற்சாகப்படுத்தும்போது ஒலிம்பிக் உள்பட பல விளையாட்டுகளில் இந்தியா பதக்கங்களை குவிக்க முடியும். அரசு மற்றும் தன்னார்வலர்கள், கீர்த்திகா, நிஷா போன்று கிராமங்களில் உள்ள வீரர், வீராங்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய பயிற்சிகளை அளித்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வைக்க வேண்டும். இதில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம் தேசிய அளவில் பதக்கங்கள் பெற வாய்ப்புள்ளது. அந்த வீரர், வீராங்கனைகள் பெருமைபடுவது மட்டுமின்றி இந்த தேசமே ஜொலிக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு