வறண்டு கிடக்கும் ஒட்டப்பட்டி ஏரி

தர்மபுரி, ஏப். 6: கோடை வெயில் காரணமாக, தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் நீரின்றி வறண்டு வருகிறது. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட சேசம்பட்டி ஏரி, லளிகம் ஏரி, நார்த்தம்பட்டி ஏரி, அதியமான் கோட்டை ஏரி, கோவிலூர் ஏரி, ஒட்டப்பட்டி ஏரி என இருபதுக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், நீர்நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. ஏ.ஜெட்டி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டப்பட்டி ஏரி சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரிக்கு ஏர்ரப்பட்டி ஏரியிலிருந்து நீர் வரத்து இருக்கும். தற்போது நிலவி வரும் கோடை வெயில் காரணமாக ஒட்டப்பட்டி ஏரி வறண்டு விட்டது. இதனால் ஒட்டப்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இது குறித்து ஏ.ஜெட்டி அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கௌரம்மாள் அரிச்சந்திரன் கூறுகையில், ‘கடந்த ஓராண்டுக்கு முன்பு ₹2.5 லட்சம் செலவில் ஒட்டப்பட்டி ஏரி தூர்வாரப்பட்டது. மழைக்காலங்களில் இந்த ஏரிக்கு நீர்வரத்து இருக்கும். தற்போது கோடை மழை பெய்து வருவதால், ஒட்டப்பட்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு உள்ளது. கனமழை பெய்தால் ஒட்டப்பட்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும்,’ என்றார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை