வறட்சி பாதித்த கிராமங்களில் பாசன வசதி செய்ய வேண்டும்

 

உடுமலை, அக். 17: உடுமலை அருகே திருமூர்த்தி நகர், வலையபாளையம், ராவணாபுரம், தேனூர்புதூர் மற்றும் அர்த்தநாரிபாளையம் போன்ற வருவாய் கிராமங்களில் விவசாயிகள் அதிகளவு தென்னை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், பாலாற்றுக்கு தெற்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைக்கு வடக்கே உள்ள விவசாய நிலங்களில் கடுமையான வறட்சி காரணமாக தென்னை மரங்கள் பட்டுப்போய், பாலைவனமாக மாறும் நிலை உள்ளது. இதையடுத்து, தண்ணீர் பாசனம் வேண்டி ஆலோசனை கூட்டம் உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், பொன்னாலம்மன் சோலை கிராமத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: வறட்சி பாதித்த பகுதிகளுக்கு அரசு பாசன நீர் வழங்க வேண்டும். இதை வலியுறுத்த விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்துக்கு ஆதரவு சேர்க்க வேண்டும். மலைகளில் இருந்து வரும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக செல்கிறது. அதை விவசாய நிலங்கள் அருகிலுள்ள நீர் நிலைகளில் செல்ல வழி வகை செய்ய வேண்டும். பாலாற்றில் திருமூர்த்தி அணை கட்டிய பின்னர் இயற்கையான முறையில் கிடைக்கும் நீர் தடை பெற்றதை மீண்டும் பெற வழி வகை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை