வறட்சியிலும் இரு போகம் நிலக்கடலை மகசூல்

மானாவாரி பயிரில் நல்ல வருவாய்ராமநாதபுர சுற்றுப்பகுதி வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் கடின உழைப்பால் மிளகாய், பருத்தி, சிறுதானியங்களை பயிர் செய்து வருகின்றார்கள். தற்போது எண்ணெய் வித்துகளில் முதன்மையான நிலக்கடலை பயிரை கனிசமாக விதைத்து நல்ல மகசூல் பெற்று விற்பனையிலும் லாபம் ஈட்டி வருகின்றனர். செவல்பட்டி,  நரிப்பையூர், கூரான்கோட்டை, பெரியகுளம், கடுகுசந்தை, மேலச்செல்வனூர், மேலக்கிடாரம் உள்ளிட்ட கடலாடி வட்டாரத்தில் 1,900 ஏக்கரிலும், வல்லந்தை, போத்தனேரி, கீழநரியன், தரைக்குடி,  பெருநாழி, பசும்பொன்,  உள்ளிட்ட கமுதி வட்டாரத்தில் 3,000 ஏக்கரிலும், நயினார்கோயில் அருகே பாண்டியூர், சேமனூர், பரமக்குடி வட்டத்தில்  சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றார்கள். சுற்றுப்பகுதியில் வடகிழக்கு பருவமழையை நம்பியே முழுவிவசாயம் உள்ளது. செப்டம்பர் இறுதியில், அக்டோபர் மாதத்தில் துவங்குவது வழக்கம். இதனை எதிர்பார்த்து 90 மற்றும் 105 நாட்களில் மகசூல் தரக்கூடிய நாட்டு நிலக்கடலை, தரணி, கோ 7 ரகம் பயிரிடப்படுகிறது. அனைத்து பகுதியிலும் மழையை மட்டுமே நம்பி மானாவாரி பயிராக பயிரிடப்படும் சூழ்நிலையில், கமுதி வட்டத்தில் அபிராமம் வருவாய் பிர்க்கா பகுதியில் மட்டும் போர்வெல் சவறு தண்ணீர், சொட்டுநீர் தண்ணீர் தெளிப்பான் பாசனம் மூலம் ஆண்டிற்கு 2 போகம் நிலக்கடலை பயிர் செய்து வருகின்ற வல்லந்தையை சேர்ந்த ராஜசேகரனிடம் பேசினோம்.‘‘மானாவாரி பருவமழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்துவருகின்றோம். நல்ல மண் வளம் இருப்பதால் நிலக்கடலை அமோகமாக விளைகின்றது. ஆனால் கடந்த 2018க்கும் முந்தைய ஆண்டுகளில் தொடர்ச்சியாக கடும் வறட்சி ஏற்பட்டது. சில ஆண்டுகளில் காலம் கடந்தும் பருவ மழை பெய்தது. இதனால் கடலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் மணல் கலந்த செம்மண் பாங்கான நல்ல மண்வளம் இருப்பதால் பெரும் பாலான விவசாயிகள் போர்வெல் அமைத்தோம், ஒருசில இடங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் சவறு தண்ணீரே வந்தது. இருந்தாலும் கோடையில் மட்டும் அதனை பயன்படுத்தி, தண்ணீர் தெளிப்பான் பாசனமுறையில் தண்ணீர் தெளித்து நிலக்கடலை விவசாயம் செய்து வருகின்றோம். வேளாண்மை துறை அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் அரசுத் திட்டங்களில் விதை, இடு பொருட்கள் வாங்கி பயன்படுத்துகிறோம். கால்நடை சாணம் உள்ளிட்ட இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துவதால் நன்கு வேர்பிடித்து, அதிக எண்ணிக்கையிலான கடலையுடன் பருப்புகள் பெரியளவில் வந்துள்ளது.இதனால் மார்க்கெட்டில் ஒரு கிலோ கடலை ₹65க்கும், வேளாண்மை அலுவலகத்தில் ரூ. 90 முதல் விலை போகிறது. ஏக்கருக்கு 15 முதல் 20 மூட்டைகள் கிடைக்கிறது. பறிப்பதற்கு பணம் என்றால் ₹500 அல்லது 5 முதல் 6 கிலோ வரையிலான நிலக்கடலை தருகின்றோம். வரும் காலங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் உரிய விலை நிர்ணயம் செய்து நிலக்கடலை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப் பன்றி, விலங்குகள் தொல்லை இருப்பதால் மானியத்தில் சோலார் மின்வேலி அமைத்து தரவேண்டும்’’ என்றனர்.வேளாண்மை உதவி இயக்குனர் சந்தோஷ் கூறும்போது, ‘‘கமுதி வட்டத்தில் பரவலாக நிலக் கடலை விவசாயம் செய்யப்பட்டாலும், அபிராமம், பெருநாழி, பசும்பொன் பகுதியில் அரசு பரிந்துரையின் பேரில் நாட்டு வேர்க்கடலை ரகம் அதிகமாக பயிர் செய்து உள்ளார்கள் விவசாயிகள். கோ 7 மற்றும் தரணி நிலக்கடலையும் சில இடங்களில் பயிர்செய்து உள்ளார்கள். பயிரிடப் படும் பகுதிகள் மணல் பாங்கான செம்மண் நிலமாக, போதிய ஈரப்பதத்துடன் இருப்பதால் செடிகள் நன்றாக வளர்ந்துவருகிறது. களை எடுக்கும் காலங்களில் தழைமணி சாம்பல் சத்து உரம், ஜிப்சம் உரத்தினை 45 நாட்களில் ஏக்கருக்கு 80 கிலோ என்ற வகையில் இரு முறை என்று 160 கிலோ வரை பயன்படுத்தலாம். உரமிட்ட பிறகு செடியின் அடிப்பகுதியை மண்ணைக் கொண்டு அணைக்க வேண்டும். இதனால் மகசூல் அதிகரிப்பதுடன், பருப்பு பெரியதாக இருக்கும், எண்ணெய்ச் சத்து அதிகமாக இருக்கும். செடியில் பூச்சி தாக்குதல் இருந்தால் வேப்பெண்ணெயை தெளிக்கலாம். மேலும் குறைபாடுகள் இருந்தாலோ, உதவிகள் தேவைப்பட்டாலோ விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், நேரடி ஆய்வு செய்து தீர்வு வழங்கப்படும்’’ என்றார். காப்பீடு…வறட்சி, கனமழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் நிலக்கடலை பயிர் பாதிக்கப்பட்டதால் பயிருக்கு பயிர்காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்த அடுத்த மாதம் நவ. 15ம்தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.394 செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.அரசுத் திட்டங்கள்வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விதைநேர்த்தி செய்யப்பட்ட தரமான நிலக்கடலை விதைகள் அதற்கான உரங்கள் மானியத்தில் கிடைக்கும். தண்ணீர் தெளிப்பான், சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் கிடைக்கும். மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராம விவசாயிகளுக்கு மானியத்தில் போர்வெல், தளவாடப் பொருட்கள், கருவிகள் உள்ளிட்ட அரசு மானியத் திட்டங்கள், உதவிகளைப் பெறலாம்.தொடர்புக்கு: ராஜசேகரன்- 97875 05166 உதவி இயக்குனர் ராஜேஷ்- 87786 79768தொகுப்பு: மு.சுப்ரமணிய சிதம்பரம்  படங்கள்: நிவேதன்

Related posts

“நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை’’கொய்யாவால் குதூகலிக்கும் தஞ்சை விவசாயி!

பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நுண்ணுயிர் உரங்கள்!

விவசாய நிலங்களைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்!