வருவாய் இழப்பு ஏற்படுத்தும் ஆவண எழுத்தர்கள் மீது நடவடிக்கை பதிவுத்துறைத்தலைவர் எச்சரிக்கை ஆவணங்கள் தயாரிக்கும்போது தவறான மதிப்பினை பதிவு செய்து

வேலூர், ஜன.9: ஆவணங்கள் தயாரிக்கும்போது தவறான மதிப்பினை பதிவு செய்து வருவாய் இழப்பு ஏற்படுத்தும் ஆவண எழுத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறைத்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் நில ஆவணம் தயாரிக்கும்போது ஆவண எழுத்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், நெறிமுறைகள் குறித்து அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு தெரு அல்லது சந்து பிரதான தெருவை சந்திக்கும் இடங்களில் அமைந்துள்ள இடங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் குறித்து கடைபிடிக்க வேண்டிய வரையறைகள் தொடர்பாக அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், துறை தணிக்கையின்போது ஒரு தெரு அல்லது சந்து, பிரதான சாலை, தெருவை சந்திக்கும் இடங்களில் அமைந்துள்ள மனைகளுக்கு பிரதான சாலை, தெருவின் மதிப்பை குறிப்பிடாமல், தவறாக அருகில் அமைந்துள்ள தெரு மற்றம் சந்தின் குறைவான சந்தை வழிகாட்டி மதிப்பினை குறிப்பிட்டு ஆவணங்கள் பதிவு செய்வதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்படும் விவரம் பதிவுத்துறை தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் ஆவண எழுத்தர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் சொத்து மற்றும் ஆவண விபரங்களை பெற்று கட்டடங்களை நேரில் சென்று அளந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏதும் ஏற்படாத வகையில் ஆவணம் எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆவணங்கள் எழுதுவது குறித்து பதிவுத்துறை தலைவரால் அவ்வப்போது பிறப்பிக்கப்படும் ஆணையினை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுகுறித்து பதிவுத்துறை தலைவர், அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒரு தெரு அல்லது சந்து பிரதான சாலை, தெருவை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள மனைகள் சொத்து தொடர்பான ஆவணங்களை தயாரிக்கும்போது, ஆவணத்திற்கான சொத்து அமைந்துள்ள இடத்தை ஆய்வு செய்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாத வகையில் அம்மனை அமைந்துள்ள சரியான பிரதான சாலை, தெருவின் பெயரினை குறிப்பிட்டு அதற்கான சரியான சந்தை வழிகாட்டி மதிப்பினை கருத்தில் கொண்டு ஆவணங்கள் தயாரிக்க வேண்டும் என அணைத்து ஆவண எழுத்தர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மனை அமைந்துள்ள சொத்து தொடர்பாக ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும்போது அந்த ஆவண சொத்திற்கான மதிப்பு அரசுக்கு இழப்பு ஏற்படாத வகையில் சந்தை வழிகாட்டி மதிப்பை பின்பற்றி தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துகொள்ள அனைத்து பதிவு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

துறைத்தணிக்கையின் போது சொத்திற்கு சந்தை வழிகாட்டி மதிப்பு முறையாக பின்பற்றாமல் குறைவான சந்தை வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் ஆவணம் தயாரித்ததன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால், ஆவணத்தினை தயாரித்த ஆவண எழுத்தர் மீது தமிழ்நாடு ஆவண எழுத்தர் உரிம விதிகள் கீழ் உடன் நடவடிக்கை எடுத்திட அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களின் இச்சுற்றறிக்கை விவரத்தினை அறிவிப்பு பலகையில் அறிவிப்பு செய்திட அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்