வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற ஸ்டிரைக் தொடக்கம்

சேலம், பிப்.28: சேலத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் தொடங்கியதால், அலுவலகங்கள் வெறிச்சோடின. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினரின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகம், 4 கோட்டாட்சியர் அலுவலகங்கள், 14 தாலுகா அலுவலகங்கள் ஆகிய அலுவலகங்களில் பணிபுரியும் தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள் நிலையிலான பணியாளர்கள் என ெமாத்தம் 640 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் நேற்று அனைத்து அலுவலகங்களும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் அர்த்தனாரி கூறுகையில்,
‘‘வருவாய்த்துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். ஏற்கனவே பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில் தற்போது காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம். அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும்,’’ என்றார். இந்த வேலைநிறுத்த போராட்டத்தால், தாலுகா அலுவலகங்களில் சாதி சான்று, வருமான சான்று, பட்டா, சிட்டா உள்ளிட்ட சான்றுகள் வழங்கும் பணி, நாடாளுமன்ற தேர்தல் பணி, முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் பணி பாதிப்படைந்துள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் பணிகளும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு