வரும் 1ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்களில் சிறப்பு ஏற்பாடு: இரவில் கலை, கலாச்சார, ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: மார்ச் 1ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு ஏற்பாடு செய்யவும், இரவு முழுவதும் பாரம்பரிய கலை, கலாச்சார மற்றும் ஆன்மிக கலைநிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் வரும் 1.3.2022 (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் 2.3.2022 (புதன்கிழமை) காலை வரை மகா சிவராத்திரி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஆடல் வல்லான் சிவ பெருமானின் அருளாற்றலையும் பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படியும் நமது பாரம்பரிய கலை, கலாச்சார மற்றும் ஆன்மிக மற்றும் சமய நிகழ்ச்சிகளை நடத்த கோயில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மகா சிவராத்திரி கொண்டாடப்படும் கோயில்களில் குறிப்பாக கோபுரங்களில் முழுமையாக மின் அலங்காரங்கள் செய்யவேண்டும். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் உரிய வரிசை தடுப்பு வசதிகள், காவல் துறை பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள், கழிவறை மற்றும் சுகாதார வசதி, குடிநீர் வசதி, தேவையான இடங்களில் தீயணைப்பு துறை வாகனம் நிறுத்தம் ஆகியவை ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மகா சிவராத்திரி விழாவில் மங்கள இசை, தேவார திருமுறை விண்ணப்பம், பக்தி சொற்பொழிவுகள், தமிழ் பக்தி இசை, நாட்டிய நாடகம், பரத நாட்டியம், வில்லிசை, கிராமிய பக்தி இசை பாடல்கள் போன்ற கலைநிகழ்ச்சிகளை தொகுத்து ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்து மகா சிவராத்திரி இரவு முழுதும் பக்தர்கள் கண்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மேற்படி நிகழ்ச்சிகள் அந்தந்த திருக்கோயிலின் நிதி வசதிக்கேற்பவும், உபயதாரர்களை கொண்டும் சிறப்பாக நடத்தப்பட வேண்டும். கலைநிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும்போது தமிழ்நாடு அரசு இசை கல்லூரி மற்றும் இசைப் பள்ளிகளில் பயின்ற கலைஞர்கள் மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த பகுதியில் உள்ள கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை