வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி முழுமையாக வெல்லும்: சபாநாயகர் அப்பாவு பேட்டி

 

கும்மிடிப்பூண்டி, பிப். 12: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி முழுமையாக வெல்லும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் புதிய தொழிற்சாலை ஒன்றை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவருடன் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து, நிருபர்களிடம் சபாநாயகர் அப்பாவு பேசும்போது, தமிழ்நாட்டில் சிறு,குறு தொழில் தொடங்குவதற்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இயந்திரங்கள் வாங்கிட தமிழ்நாடு அரசு சார்பில் 25% மானியம் வழங்கப்படுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் நாற்காலி தொடர்பாக பிரச்னை இல்லை. எதிர்கட்சி தலைவர் நாற்காலியைத் தவிர பிற இடங்களை ஒதுக்குவது சபாநாயகரின் உரிமை என ஏற்கனவே முன்னாள் சபாநாயகர் தனபால் கூறியுள்ளதை நான் நினைவு கூறுகிறேன். மேலும், ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்கிறது.

ஆனால் விவசாய கடன், மாணவர் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. நலிந்த நிலையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும். தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி முழுமையாக வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. ரூ.50 பெட்ரோல் வழங்குவதாக கூறி ரூ.110க்கு விற்கிறார்கள், ரூ.450ல் இருந்த சிலிண்டர் ரூ.1100க்கு விற்கப்படும் நிலையில் மீண்டும் மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்களா? என்றார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு