வருண பகவானின் கருணை கிடைக்குமா? பறக்கை பகுதியில் நடவு பணிகள் தொடக்கம்: ஜூன் 1ம்தேதி அணை திறக்கப்படும் என விவசாயிகள் நம்பிக்கை

 

நாகர்கோவில், மே 5 : பறக்கை பகுதியில் நடவு பணிகள் தொடங்கி உள்ளன. ஜூன் 1ம் தேதி அணை திறக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக விவசாயிகள் கூறினர். குமரி மாவட்டத்தில் கும்பப்பூ மற்றும் கன்னிப்பூ சாகுபடிகள் நடந்து வருகிறது. இதில் தற்போது கும்பப்பூ அறுவடை பணி முடிந்து கன்னிப்பூ சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். கன்னிப்பூவின் போது அம்பை 16, திருப்பதிசாரம் 5 மற்றும் பாரம்பரிய நெல் ரகமான கட்டிச்சம்பா உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்வது வழக்கம்.

கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். தற்போது அணையில் 40 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. ஆனாலும் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், விவசாயிகள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் பறக்கை, சுசீந்திரம், புத்தளம் பகுதியில் பறக்கை குளம், பால்குளத்தில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. இதை தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன் பறக்கை வயல்பரப்புகளில் தொழி நாற்றங்கால் தயாரிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வயல்களை உழுது, வயல்களுக்கு தேவையான உரங்களையும் போட்டனர். இந்த நிலையில் மே மாதம் பிறந்ததை தொடர்ந்து நாற்றுகளை பிரித்து வயல்களில் நடும் பணி தற்போது தொடங்கி உள்ளது. இயந்திரங்கள் கொண்டு நடவு பணி நடக்கிறது. விவசாய கூலி தொழிலாளர்கள் தட்டுப்பாடு காரணமாக, இயந்திர நடவு தான் இப்போது அதிகம் நடக்கிறது. பறக்கைகுளம், பால்குளத்தில் உள்ள தண்ணீர் இன்னும் 20 நாட்கள் வரை தாக்கு பிடிக்கலாம்.

ஜூன் மாதம் அணை திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர். இது குறித்து பறக்கை விவசாயி ரவீந்திரன் கூறுகையில், ஜூன் மாதம் அணை கண்டிப்பாக திறக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பாசன துறையினரும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

மாவட்ட நிர்வாகமும் உறுதி அளித்துள்ளது. இயந்திர நடவு தான் அதிகம் நடக்கிறது. ஒரு சில இடங்களில் 2 வது நடவுக்கு பணியாளர்களை வைத்து நடவு செய்கிறார்கள். வருண பகவானின் கருணையையும் எதிர்பார்க்கிறோம். தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. ஜூனில் பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை