வரலாற்று ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை ஜவ்வாதுமலையில் பல்லவர் கால நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன்காந்தி, வணிகவியல் பேராசிரியர் ராஜ்குமார் மற்றும் வரலாற்று ஆய்வாளர் காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் ஜவ்வாது மலையில் மேற்கொண்ட கள ஆய்வில் பல்லவர் காலத்தை சேர்ந்த கொற்றவை சிலை மற்றும் நடுகற்களை கண்டறிந்துள்ளனர்.இதுகுறித்து பேராசிரியர் க.மோகன்காந்தி கூறியதாவது:ஜவ்வாதுமலை என்பது வேலூர் அமிர்தியில் தொடங்கி போளூர், செங்கம், ஆலங்காயம் வட்டங்களில் பரவி சிங்காரப்பேட்டையில் முடிவடைகிறது. ஏறத்தாழ 250 கி.மீ. சுற்றளவு கொண்ட இம்மலையில் 420 கிராமங்களில் 2.50 லட்சம் மக்களும் வாழ்கின்றனர். இம்மலை பல வரலாற்று ஆவணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பாறை ஓவியங்கள், கற்கோடாரிகள், கற்திட்டைகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் இவற்றோடு ஏராளமான நடுகற்கள் என இம்மலையின் வரலாற்று தரவுகள் நீண்டு கொண்டே செல்கின்றன.எங்கள் ஆய்வுக்குழுவினர் ஜவ்வாதுமலையிலுள்ள கூட்டத்தூர் என்னும் சிற்றூரில் களஆய்வினை மேற்கொண்டோம். கூட்டாத்தூரிலுள்ள ஏரிக்கு மேலே அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. இந்த இடத்தில் பல்லவர் காலத்தை சேர்ந்த கொற்றவை சிலையும் 4 நடுகற்களும் உள்ளன.நாடுபிடிக்கும் போரில் வெற்றி வேண்டி கொற்றவையை போர் மறவர்கள் வணங்குவது மரபு. அந்த வகையில் பல்லவர் கால கலை நுணுக்கத்துடன் இந்த கொற்றவை சிலை உள்ளது.37 அங்குலம் உயரமும் 27 அங்குலம் அகலமும் கொண்ட பலகை கல்லில் இச்சிலை அமைந்துள்ளது. இதில் உள்ள எழுத்து பொறிப்புகள் படிக்கும் அளவிற்கு இல்லாமல் சிதைந்துள்ளன. இச்சிலையானது வலதுபக்கம் முடிக்கப்பட்ட கொண்டையுடனும், இடது கையை இடுப்பில் ஊன்றியும், வலதுகையில் கத்தியை தாங்கியும் உள்ளது. இடுப்புக்கு கீழ் பகுதி மண்ணில் ஆழமாக புதைந்துள்ளது.இரண்டாவதாக நடுகல் இரண்டாக உடைந்துள்ளது. இது 37 அங்குலம் உயரமும், 28 அங்குலம் அகலமும் கொண்டுள்ளது. நடுகல் வீரனின் இடது கையில் வில்லும், வலது கையில் குறுவாளும் உள்ளது. இந்த நடுகல்லிலும் எழுத்து பொறிப்புகள் சிதைந்த நிலையிலேயே உள்ளன.3வது நடுகல் 40 அங்குலம் உயரமும் 24 அங்குலம் அகலமும் கொண்டதாக உள்ளது. இடது கையில் வில்லும், வலது கையில் குறுவாளுடன் போர்க் கோலத்தோடு நடுகல் வீரன் உள்ளான். 4வது நடுகல் 40 அங்குலம் உயரமும் 27 அங்குலம் அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் கொண்ட கோலத்தோடு நடுகல் வீரன் காட்சித் தருகிறான்.5வது நடுகல் 50 அங்குலம் உயரமும் 27 அங்குலம் அகலமும் கொண்டதாக உள்ளது. வலது பக்க கொண்டையுடன் வீரன் காட்சி தருகிறார். வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வீரனின் கழுத்து பகுதியில் ஒரு அம்பும், வயிற்றுப்பகுதியில் ஒரு அம்பும் பாய்ந்துள்ளது சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள எழுத்துக்களும் தெளிவாக இல்லை. இந்த நடுகற்களுக்கு அருகாமையில் உள்ள எட்டி மரத்திற்கு அருகே 2 நடுகற்கள் உள்ளன. இதில் முதல் நடுகல் 5 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்ட பிரமாண்டமான பலகை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்நடுகல் வீரன் தனது இரண்டு கைகளால் இரண்டு மாடுகளைப் பிடித்துக் கொண்டுள்ளது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அருகில் உள்ள மற்றொரு நடுகல் இரண்டாக உடைந்துள்ளது. ஒரு பாகம் மட்டுமே காணக்கிடைக்கிறது. இது விஜய நகர காலத்தை சேர்ந்த உடன்கட்டை நடுகல்லாகும். இந்நடுகற்களை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தினால் பல வரலாற்று செய்திகள் வெளிப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்துக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ்

பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இளநீர் கொள்முதல் விலை ரூ.40ஆக உயர்வு: தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி

ஊட்டி அருகே சாலையில் உலா வரும் காட்டு மாடு: பொதுமக்கள் அச்சம்