வரத்து குறைவு மற்றும் முகூர்த்த நாள் என்பதால் காய்கறி, பூக்களின் விலைஉயர்வு: கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தகவல்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு மற்றும் முகூர்த்த நாள் என்பதால் காய்கறிகள் மற்றும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 500 வாகனங்களில் மூலம்  5,000 டன் காய்கறிகள் வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று வரத்து குறைவு மற்றும் முகூர்த்த நாள் என்பதால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதில், ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.45லிருந்து ரூ.55க்கும், பெங்களூர் தக்காளி ரூ.60லிருந்து ரூ.70க்கும், பீன்ஸ் ரூ.60லிருந்து ரூ.70க்கும், சின்ன வெங்காயம் ரூ.30லிருந்து ரூ.40க்கும், பெரிய வெங்காயம் ரூ.17லிருந்து ரூ.21க்கும், உருளைகிழங்கு ரூ.25லிருந்து ரூ.35க்கும், கேரட் ரூ.30லிருந்து ரூ.40க்கும், முருங்கைக்காய் ரூ.30லிருந்து ரூ.40க்கும், சவ்சவ் ரூ.20லிருந்து ரூ.30க்கும், நூக்குள் ரூ.25லிருந்து ரூ.35க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல், சென்னை புறநகர் சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80க்கும், பீன்ஸ் ரூ.80க்கும், கேரட் ரூ.50க்கும், வெங்காயம் ரூ.35க்கும், சின்ன வெங்காயம் ரூ.50க்கும், சவ்சவ் ரூ.40க்கும், முருங்கைக்காய் ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ். முத்துகுமார் கூறும்போது, மார்க்கெட்டிற்கு 600 வாகனங்களில் இருந்து 7000 டன் காய்கறிகள் வந்திருக்க வேண்டும். ஆனால் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறி விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும், முகூர்த்த நாள் முடியும் வரை காய்கறி விலைகள் அதே விலையில் நீடிக்கும் என கூறினார். இதனை தொடர்ந்து கோயம்பேடு பூ மார்க்கெட் பொருளாளர் பெருமாள் பேசுகையில், முகூர்த்த நாள் தொடங்கி விட்ட நிலையில், ஒரு கிலோ மல்லி ரூ.300க்கும், கனகாம்பரம் ரூ.500க்கும், முல்லை ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், முகூர்த்தநாள் முடிந்த பிறகு பூக்களின் விலை படிப்படியாக குறையும் என பேசினார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை