வரதராஜபெருமாள் கோயிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மாயம்: திடீர் தகவலால் பக்தர்கள் அதிர்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்கள் மாயமாகிவிட்டதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் ஏராளமான சைவ, வைணவ கோயில்கள் உள்ளன. இதில் அத்தி வரதர் வைபவம் நடந்த வரதராஜ பெருமாள் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் சென்னை உள்பட பல இடங்களில் உள்ளன. இந்த சொத்துக்கள், அறநிலையத்துறை அதிகாரிகளால், முறையாக பராமரிக்கவில்லை என பக்தர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு வருவதுபோல் வரதராஜ பெருமாள் கோயில் சொத்துக்கள் மாயமான விவகாரத்திலும் இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான சொத்து விவரம், வாடகைக்கு விடப்பட்டுள்ள இடங்கள், வாடகை பாக்கி உள்பட பல விவரங்கள் அனைத்து பக்தர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் கோயில் வளாகத்தில் விளம்பர பலகை வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் ஒரு வழக்கின் தீர்ப்பில் அறிவுறுத்தியது.அதன்படி காஞ்சிபுரத்தில் பல்வேறு கோயில்களில் பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன. ஆனால் வரதராஜபெருமாள் கோயிலில் மட்டும், சொத்து விவரம் அடங்கிய விளம்பர பலகை வைக்கவில்லை. இது தொடர்பாக கடந்த 2019 மே 31ம் தேதி காஞ்சிபுரத்தை சேர்ந்த டில்லிபாபு என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். அதில், கோயில் நிர்வாகம் சார்பில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 448.43 ஏக்கர்  நிலம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 16ம் தேதி காஞ்சிபுரத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். அதற்கு, வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 177.20 ஏக்கர் நிலம் உள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளில் வரதராஜ பெருமாள் கோயில் சொத்துக்களில் 269.23 ஏக்கர் நிலம் மாயமாகிவிட்டது என தெரியவந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டம்தானே என்று அதிகாரிகள் பதில் அளித்துள்ளார்களா அல்லது நிலம் மாயமாகி உள்ளதா என பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்….

Related posts

சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு

தமிழகத்தில் ஜூலை 9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் ஜூலை 23-க்குள் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு