வன விலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நவம்பர் இறுதிக்குள் இழப்பீடு வழங்கப்படும்-வனத்துறை அமைச்சர் தகவல்

ஊட்டி : வன விலங்குகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மற்றும் பயிர் சேதங்களுக்கான நிலுவை இழப்பீட்டு தொகை அடுத்த மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார். வனத்துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ஊட்டியில் நடந்தது. தமிழகம் மாளிகை அரங்கில் நடந்த இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.சுமார் மூன்று மணி நேரம் இந்த நடந்த கூட்டத்தில் மனித வன விலங்கு மோதல், அதனை தடுக்கும் முறைகள், வன விலங்குகளின் பாதுகாப்பு, அகழிகள் அமைப்பது மற்றும் ெதாங்கும் வேலிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் ராமசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:முதலமைச்சர், தமிழகத்தில் தற்போதுள்ள வனப்பரப்பினை 33 சதவீதமாக உயர்த்திட ஆணையிட்டுள்ளார். அதனை நடைமுறைப்படுத்தும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் வனத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், வனப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்னை தொடர்பாகவும், தேவையான அடிப்படை வசதிகளை செய்வது குறித்தும், வன விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க வனப்பகுதிகளில் தேவைப்படும் இடங்களில் அகழிகள் அமைப்பது தொடர்பாகவும், அகழிகள் அமைக்க முடியாத இடங்களில் தொங்கும் வேலிகள் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், வன விலங்குகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மற்றும் பயிர் சேதங்களுக்கான நிலுவை இழப்பீட்டு தொகை அடுத்த மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வு கூட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் (கள இயக்குநர்) வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் சச்சின், முதுமலை புலிகள் காப்பகம் (துணை இயக்குநர்) அருண், உதவி வனபாதுகாவலர் சரவணன் உட்பட வனத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்….

Related posts

திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு