வன பத்ரகாளியம்மன் கோயில் அருகே பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து நெரிசல்

 

மேட்டுப்பாளையம், செப்.4: மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் அருகே பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வன பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை, ஆடி வெள்ளிக்கிழமைகள் மற்றும் விடுமுறை தினங்களில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் சுப முகூர்த்த தினம் என்பதால் வன பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தேக்கம்பட்டியில் இருந்து மரத்தூள் ஏற்றி வந்த லாரியின் முன்புற சக்கரம் சாலையோர பள்ளத்தில் மண்ணில் புதைந்தது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுமார் 2 கி.மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. பொதுமக்கள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு குழந்தைகளுடன் நடந்தே கோயிலுக்கு சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து 2 கிரேன்கள் மூலமாக சுமார் 5 மணி நேரமாக போராடி லாரியை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து போக்குவரத்து பாதிப்பு சரியானது.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி