வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: தமிழக அரசு மனு தாக்கல்

சென்னை:  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி 26ம் தேதி தமிழக அரசால் சட்டம் இயற்றப்பட்டது. இதையடுத்து அதற்கு ஆளுநரும் அதற்கு ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 25க்கும் மேற்பட்டோர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு, ‘ இந்த வழக்கில் அரசு தரப்பில் அளித்த விளக்கங்கள் போதுமானதாக இல்லை எனவே, வன்னியர்களுக்கு 10.5சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர்.இதையடுத்து, இந்த வழக்கில் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என பாலமுரளி, வி.வி.சாமிநாதன், அனைத்து மறவர் அமைப்பினர், விஜயகுமார் உட்பட 10 பேர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தனர். இதேப்போன்று வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து சி.ஆர்.ராஜன் என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை கடந்த 10ம் தேதி தாக்கல் செய்திருந்தார்.இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், வன்னியருக்கு 10.5சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் மாநில அரசு புதிதாக எந்த இடஒதுக்கீடும் வழங்கவில்லை. மேலும் இந்த உள்ஒதுக்கீடு என்பது வன்னியர் சமுதாயத்துக்கானது மட்டுமல்ல அதில் ஏழு பிரிவினருக்கானது ஆகும். ஏற்கனவே இதேப்போன்று பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் பிரிவினருக்கு தனி இடஒதுக்கீடும், அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் படி மாநில அரசு இதுபோன்று சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு. குறிப்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983ல் நடத்திய கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகையின் அடிப்படையிலேயே தான் இந்த உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சமூக நீதி கிடைக்கும் வகையில் தான் இந்த உள்ஒதுக்கீடு இருக்கும். ஆனால் இவை எதனையும் தீர ஆய்வு செய்யாமல் உயர்நீதிமன்ற கிளை இந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது. அதில் எந்த முகாந்திரமும் கிடையாது. மேலும் இந்த தடை உத்தரவால் ஒட்டுமொத்த நிர்வாகமும் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு என்பது தவறானது மட்டும் கிடையாது. சட்டவிதிகளுக்கும் முரணானது ஆகும். அதனால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து முகாந்திரமும் இருப்பதால், எதிர்மனுதாரர்களின் வாதங்களை கேட்காமலே 10.5சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உயர் நீதிமன்ற கிளை வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கானது அடுத்து ஓரிரு நாளில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என தெரியவருகிறது. இதேபோல் இந்த விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சி தலைவர் ஜி.கே.மணி தரப்பில் மேல்முறையீட்டு மனுவும், மதுரையை சேர்ந்த முனியசாமி என்பவர் தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் படி மாநில அரசு இதுபோன்று சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்