வனவிலங்குகள் நடமாட்டம், விபத்துக்களை கண்காணிக்க திருப்பதி மலைப்பாதையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்-முதன்மை பாதுகாப்பு அதிகாரி தகவல்

திருமலை : வனவிலங்குகள் நடமாட்டம், விபத்துக்களை கண்காணிக்க திருப்பதி மலைப்பாதையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் தெரிவித்துள்ளார். உலக பிரசித்தி பெற்ற இந்துக்களின் புனித நகரமாக உள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில்  இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரயில்கள், கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருப்பதி வருகின்றனர். அவ்வாறு, வரும் பக்தர்கள் சொந்த வாகனத்திலும், வாடகை வாகனத்திலும், அரசு பஸ்சில் மலைப்பாதை வழியாக சென்று தரிசனம்  செய்கின்றனர். விபத்துகளை தவிர்க்க திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் வாகனங்கள் 28 நிமிடத்திலும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு அதிக வளைவுகள் கொண்ட முதலாவது  மலைப்பாதையில் 48 நிமிடங்களுக்கு குறையாமல் செல்ல வேண்டும் என  திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வேக கட்டுப்பாடு விதித்துள்ளனர். இதற்கு, முன்பு திருப்பதியில் வாகன சுங்க கட்டணம் செலுத்தி ரசீது பெற்ற பின் அதில் நேரம் குறிப்பிடப்பட்டதில் இருந்து மலைப்பாதையில் வந்த வேகம் கணக்கிடப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்த வாகனங்கள் மீண்டும் திருமலைக்கு வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்பொழுது தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளது போன்று பாஸ்ட் ட்ராக் மூலம் சுங்க கட்டணம் பெறப்படுகிறது. இதனால், வேக கட்டுப்பாடு கணக்கிடப்படுவதில்லை. இதனால், பல வாகனங்கள் அதிவேகமாக மலைப்பாதையில் செல்கிறது. உதாரணத்திற்கு கடந்த 27ம் தேதி தொடங்கிய பிரமோற்சவத்தின் போது திருப்பதியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான 77 வயதான கோபால் என்பவர் திருப்பதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மலைப்பாதையில் விபத்துக்குள்ளாகி 2 கால்கள் உடைந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.  எந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது என்று கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்று மலைப்பாதையில் அதிவேகமாக சென்று விபத்துகளை ஏற்படுத்தும் வாகனங்களை கண்காணிக்கவும், மலைப்பாதையில் அடிக்கடி சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து விடுகின்றன. இதனால், வாகனங்கள் மற்றும் வனவிலங்குகளை கண்காணிக்க மலைப்பாதையில் சிசிடிவி கேமராக்களை பொருத்த தேவஸ்தானம் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.  அலிபிரியிலிருந்து திருமலைக்கு செல்லும் 18 கி.மீட்டர் தூரத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 5 கேமராக்கள் வீதம் 90 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் மலைப்பாதையில் 12 கி.மீட்டர் தூரத்திற்கு 60  கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதில், மலைப்பாதை வளைவுகள் மற்றும் அதிக தூரம் கவரக்கூடிய வகையில்  கேமராக்களை பொருத்தி 24 மணிநேரம் கண்காணிக்கப்பட்டு மலைப்பாதைகளில் வாகன விபத்து ஏற்பட்டாலோ? அல்லது வனவிலங்குகள் புகுந்தாலோ? உடனடியாக போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிெலன்ஸ்  பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்து மீட்பு பணியில் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும். ஏற்கனவே, திருமலை முழுவதும் 1,679 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு திருமலையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மலைப்பாதையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால் ஏழுமலையான் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அலிபிரி சோதனைச்சாவடியில் இருந்து திருமலைக்கு வந்து செல்பவர்களின் நடமாட்டம் அனைத்தும் கண்காணிப்பு கேமராவின் கீழ்க்கொண்டு வரப்பட உள்ளது என முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் தெரிவித்தார்….

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு