வனத்துறை பகுதியில் மணல் அள்ளிய 4 பேர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் வனத்துறைக்கு சொந்தமான சத்தியவாடி காப்புக்காடு, மோசட்டை சரகம் வெள்ளாற்று பகுதியில் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமையில் வனவர்கள் சிவகுமார், பன்னீர்செல்வம், வனக்காப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், அமுத பிரியன் உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து திருட்டுத்தனமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டு வந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களான அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, ஓலையூர் கிராமத்தை சேர்ந்த தங்கப்பிள்ளை மகன் ஆசைத்தம்பி(43), தாவிடநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் வேல்முருகன்(50), ராமச்சந்திரன் மகன் சின்னையன்(40), விருத்தாசலம் தாலுகா வண்ணான்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கதிர்காமன் மகன் சின்னராசு(32) ஆகிய நான்கு பேரையும் வனச்சரக அலுவலகம் கொண்டு சென்று தமிழ்நாடு வனச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் மாவட்ட வனத்துறைக்கு பரிந்துரை செய்ததின்பேரில் ஆசைத்தம்பி, சின்னராசு ஆகிய இருவருக்கும் தலா 35 ஆயிரம் ரூபாயும், வேல்முருகன், சின்னையன் ஆகியோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்