வண்டலூர் உயிரியல் பூங்காவில் பரபரப்பு: சிங்கத்தை தொடர்ந்து பெண் சிறுத்தை உயிரிழப்பு

கூடுவாஞ்சேரி: சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில்  சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட அரியவகை விலங்குகளும், பறவைகளும் ஏராளமாக உள்ளன. இந்நிலையில், கடந்த 15ம் தேதி  ரேஞ்சர்கள் உட்பட 315 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில்  ஒரு ரேஞ்சர் உட்பட 76 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாட்டு பொங்கல் தினமான கடந்த 17ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படும் என பூங்கா நிர்வாகம் அதிரடியாக அறிவித்தது.இந்நிலையில் கடந்த 17ம் தேதி விஷ்ணு என்ற 5 வயது ஆண் சிங்கம் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. பூங்கா மருத்துவமனையில் சிங்கத்தை பிரேத பரிசோதனை செய்தபோது  உணவு குழாய் வெடித்து இறந்ததாக கூறினர். மேலும் சிங்கத்தின் மாதிரி  கால்நடை பல்கலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் கொரோனா தொற்றால் சிங்கம் இறந்ததா? அல்லது உணவு குழாய் வெடித்து இறந்ததா? என தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பூங்காவில் உள்ள ஜெயா என்ற 18 வயது பெண் சிறுத்தை இன்று காலை உயிரிழந்தது. இதன் உடல் பூங்கா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை வந்த பிறகுதான் சிறுத்தை கொரோனா தொற்றால் இறந்ததா? அல்லது வேறு காரணமா? என தெரியவரும். இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பூங்காவில் அடுத்தடுத்து  சிங்கம், சிறுத்தை இறந்த சம்பவம் வண்டலூர் பூங்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை