வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தடுப்பூசி போடாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’-கலெக்டர் எச்சரிக்கை

திருப்பத்தூ : திருப்பத்தூர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தடுப்பூசி போடாவிட்டால் அந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் அமர் குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்  கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அவர் கூறியதாவது:திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளதால் பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. அதேநேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் பாதுகாக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக அரசு கூறும் அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வு அரசு அதிகாரிகளிடம் பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில், வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள்,  சிறு வியாபாரிகள் தங்களது ஆதார் அட்டைகளை எப்போதும் தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும். அரசு அதிகாரிகள் தினந்தோறும் ஆய்வுக்கு சென்று ஆதார் எண்ணை பரிசோதனை செய்து அந்த ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தாத பணியாளர்களுக்கு அங்கேயே தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி போடாமல் ஊழியர்கள் கடைகளில் பணியாற்றுவது தெரியவந்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் என 41 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர 167 நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் குழு அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 10 மருத்துவக்குழு பணியமர்த்தப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்