வட்டார மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல், மே 13: நாமக்கல் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாண்மை அலுவலகத்தில், காலியாக உள்ள 4 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர்் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார இயக்கத்தின், நாமக்கல் மாவட்ட மேலாண்மை அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் 4 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (கொல்லிமலை-2, வெண்ணந்தூர்- 2) தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு பெண்கள் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர். பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் எம்.எஸ் ஆபிஸில் குறைந்தபட்சம் 3 மாத சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அந்தந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியான பெண்கள் தங்களது விண்ணப்பத்தை வரும் 25ம் தேதிக்குள் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை