வட்டாட்சியர் அலுவலகத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று  முன்தினம் மாலை வழக்கம்போல் பணிகள் முடிவடைந்ததும் அலுவலகத்தை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். பின்னர் அலுவலகத்தில் 2 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியேறியது. இதனை கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த  கிராம உதவியாளர்கள் மணிகண்டன், பழனி, முரளி ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் சென்று பார்த்தபோது தீ கொலுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்த வட்டாட்சியர் மகேஷ் அங்கு வந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அங்கிருந்த முக்கிய ஆவணங்கள், 6 கம்ப்யூட்டர்கள், 4 பிரிண்டர்கள், ஒரு ஸ்கேனர், 6 மேஜைகள், நாற்காலிகள் உள்பட பல்வேறு தளவாட பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்ததாகவும் தெரிகிறது. தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வருவாய் கோட்டாட்சியாளர் மீனா பிரியதர்ஷினி சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

அமாவாசை, வார இறுதியையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே