வடபழனி முருகன் கோயிலில் ஜனவரி 23ல் கும்பாபிஷேகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: வட பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேக திருப் பணிகளை நேற்று மாலை  அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் 2007ல் நடந்தது. 2019ல் ஆகமவிதிப்படி கும்பாபிஷேகம் நடந்து இருக்கவேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, திருப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் ஆலோசனைப்படி  வரும்  ஜனவரி 23ம் தேதி குடமுழுக்கு நடத்த தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.கோயிலில் தியான மண்டபம், மடப்பள்ளி மற்றும் பல மண்டபங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. முப்பத்தி மூன்று அடியில் தங்க தகடுகளால் ஆன கொடிமரம் கோயிலுக்கு மேலும் அழகூட்டுகிறது. மரத்தேர் மற்றும் தங்கத்தேர் அழகுற புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த தயார் நிலையில் உள்ளது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட  அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டம் நிரம்பி வழியும் முகூர்த்த நாட்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி திருமணங்கள் நடத்துவதற்கு 43 முகூர்த்த மண்டபங்கள் அமைக்கப்பட உள்ளன. கும்பாபிஷேகத்திற்கு பிறகு, கோயிலின் அலுவலகம் கோயிலுக்கு பின்புறம் உள்ள இடத்தில் சிறந்த முறையில் அமைக்கப்படும். காலணி பாதுகாப்பு மையம், முடி காணிக்கை செலுத்தும் இடம், குளியலறை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.13 கோடி செலவில் நடைபெற உள்ளது. கோயில் அருகே போக்குவரத்து நெரிசலுக்கு  நிரந்தர தீர்வு காண திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது.  கும்பாபிஷேகத்திற்கான வரவு செலவு கணக்குகள் கும்பாபிஷேகம் பிறகு  வெளிப்படையாக நிச்சயம் வெளியிடப்படும். இதன் அருகேயுள்ள மிக பழமைவாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோயிலும் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு