வடக்கு மண்டலம் சார்பில் சென்னைக்கு ரூ.5 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

 

கோவை, டிச.8: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் நடந்து வருகின்றன. இந்நிலையில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் அலுவலகத்தில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் ஆகியோர் அனுப்பி வைத்தனர். இதில், மேயர் சார்பில் ரூ.2 லட்சம், வடக்கு மண்டல தலைவர் சார்பில் ரூ.1 லட்சம் மற்றும் வடக்கு மண்டல அதிகாரிகள், தன்னார்வலர்கள் மூலம் ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதில், ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், 10 கிலோ அரிசி, சேலை, வேஷ்டி, பாத்திரம், குடிநீர், பெட்ஷிட், பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், ஏற்கனவே வடக்கு மண்டலம் சார்பில் மீட்பு பணிக்காக சென்ற பணியாளர்களுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பொதுமக்களுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, மூன்றாவது முறையாக நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் என பலர் பங்கேற்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை