வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகள், மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.3.2022) தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைத்திடும் வகையில், பிரையண்ட் நகர், மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 19 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம் தெருக்களில் 14 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மேக் கார்டன், குமரன் நகர், சத்தியா நகர், அம்பேத்கர் நகர் மற்றும் சுந்தரவேல்புரம் பகுதிகளில் 11 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர்  கடந்த 2.12.2021 அன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.   அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் இன்று தூத்துக்குடி மாவட்டம், பிரையண்ட் நகரில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் வகையில், தூத்துக்குடி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், 9 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பிரையண்ட் நகர் மேற்கு பிரதான சாலையின் மேற்குப் பகுதி வடிகால் மற்றும் பிரையண்ட் நகர் மேற்குப் பகுதி தெருக்கள் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இணைப்பு வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வடிகால் அமைக்கும் பணியில் மொத்தம் 6.237 கிலோ மீட்டரில் 3.560 கிலோ மீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, 10 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பிரையண்ட் நகர் மேற்கு பிரதான சாலையின் கிழக்கு பகுதி பிரதான வடிகால் மற்றும் சிதம்பர நகர், பிரையண்ட் நகர் மத்திய பகுதி தெருக்கள் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் குறித்து முதலமைச்சர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். வடிகால் அமைக்கும் பணியில் மொத்தம் 8.208 கிலோ மீட்டரில்  5.950 கிலோ மீட்டர் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும், 14 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுப்பையாபுரம் முதல் மாநில நெடுஞ்சாலை-176 வரையிலான பிரதான வடிகால் மற்றும் சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம் தெருக்கள் முழுவதும் நடைபெற்று வரும் பிரதான வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து முதலமைச்சர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். வடிகால் அமைக்கும் பணியில் மொத்தம் 8.460 கிலோ மீட்டரில்  2.600 கிலோ மீட்டர் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.அதனைத் தொடர்ந்து, 11 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேக் கார்டன், குமரன் நகர், சத்தியா நகர், அம்பேத்கர் நகர் மற்றும் சுந்தரவேல்புரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணியில் மொத்தம் 8.332 கிலோ மீட்டரில், 4.400 கிலோ மீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டதோடு, சாலைப் பணிகள் நடைபெறும்போது தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு சாலையின் தரத்தினை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, அப்பகுதி மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைத்திட விரைந்து நடவடிக்கை மேற்கொண்டதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, கோரிக்கை மனுக்களையும் அளித்தார்கள்.   இந்த நிகழ்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி மாநகராட்சி  மேயர் என். பி. ஜெகன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் டி. சாருஸ்ரீ, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்….

Related posts

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சியில் 3 வயது ஆண் குழந்தை கொலை

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி துவங்கியது