வங்க கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் 4 நாள் கனமழை தொடரும்: அதிகபட்சம் 25 செ.மீ. மழை பெய்யும்; சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதி மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதி ஆகியவற்றை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரும். இதனால், தமிழகத்தில் இன்று முதல் 13ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கன, மிக கன மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை தற்போது மேலும் தீவிரம் அடைய தொடங்கியுள்ளதால், தென்மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4.5 கிமீ உயரம் வரை நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி, நேற்று காற்றழுத்தமாக மாறியது. அது மன்னார் வளைகுடா பகுதி மற்றும் வட இலங்கை பகுதியை நெருங்கி வந்தது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு வந்து வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. இது தவிர இலங்கை அருகே ஒரு காற்று சுழற்சி, கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்று சுழற்சி, அந்தமான் பகுதியில்  இருந்து ஒரு காற்று சுழற்சி என 3 காற்று சுழற்சிகள் தமிழக கடலோரப் பகுதியை நெருங்கி வருவதால், மன்னார் வளைகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் இந்த 3 காற்று சுழற்சியும் இன்று இணையும். அதனால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும். இதனால், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். மேலும், இன்று நள்ளிரவு முதல் வடதமிழகத்திலும் மழை பெய்யும். 11ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். குறிப்பாக கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரை கனமழை இருக்கும். இது தவிர கேரளா, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, பகுதிகளிலும் 11, 12, 13ம் தேதிகள் வரை கனமழை பெய்யும். அதற்கு பிறகு அந்த நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக் கடல் நோக்கி செல்லும். 13ம் தேதி வட தமிழகத்தில் நிலை கொள்ளும் வாய்ப்புள்ளதால், சென்னையில் 13ம் தேதி கனமழை பெய்யும். பின்னர் 17, 18, 19ம் தேதி வரை இடைவெளி விட்டு அடுத்த காற்றழுத்தம் வங்கக் கடலில் உருவாகும். அதன் மூலம் 20, 21ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்பதால்  அதிகபட்சமாக 20 செமீ முதல்  25 செமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனமழையை பொறுத்தவரையில் 6 செமீ, மிக கனமழை 11 செமீ, அதிக கனமழை 15 செமீ, அதீத கனமழை 20 செமீ வரையும் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் பெரும்பாலான இடங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் கடந்த அக்டோபர் முதல் நேற்று வரை இயல்பாக 40 செமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் 46 செமீ வரை பெய்துள்ளது. இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். நாளை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், ராணிப்பேட்டை, வேலூர்,  திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். மேலும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வரை வீசும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.* தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. * இதையடுத்து தமிழகம் முழுவதும் கன, மிக கன மழை பெய்து வருகிறது. * மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டம் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.* வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வரை வீசும்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்