வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி மரக்காணம் வாலிபரிடம் பணம் மோசடி

புதுச்சேரி, அக். 27: வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி மரக்காணத்தை சேர்ந்த வாலிபரிடம் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டதாக திருக்கனூர் பெண் மீது காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. புதுவை மாநிலம் திருக்கனூரை அடுத்த சோம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நிலா என்கிற தெய்வானை (45). இவர் சமூக வலைதளம் மூலமாக பிரதம மந்திரியின் முத்ரா யோஜனா திட்டத்தின் மூலமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வங்கி கடன் பெற்று தருவதாக தகவல் கொடுத்திருந்தார். இதை பார்த்த விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (36) என்பவர், சமூக வலைதளம் மூலமாக நிலாவை தொடர்பு கொண்டு தனக்கு வங்கிக் கடன் பெற்றுத் தருமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து வங்கியில் கடன் பெற்று தருதல் உள்ளிட்ட சில காரணங்களைக் கூறி ரூ.17,500 வரை போன் பே மூலமாக பெற்றுக் கொண்ட நிலா என்ற தெய்வானை, அவர் கூறியபடி குறிப்பிட்ட காலத்திற்குள் மணிகண்டனுக்கு வங்கிக் கடனை பெற்றுத் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வங்கி கடன் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த மணிகண்டன், தான் போன் பே மூலமாக செலுத்திய பணத்தையாவது திருப்பித் தருமாறு கேட்டாராம். ஆனால் அதையும் கொடுக்காமல் அவர் தொடர்ந்து ஏமாற்றி வரவே, தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த மணிகண்டன், இதுபற்றி திருக்கனூர் போலீசில் முறையிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், எஸ்ஐ புனிதராஜ் தலைமையிலான போலீசார், மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட 3 பிரிவின்கீழ் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவான தெய்வானையை தேடி வருகின்றனர். மணிகண்டன் மட்டும் இதேபோல் ஏமாற்றப்பட்டாரா? அல்லது வேறு சிலரும் இந்த மோசடியில் சிக்கினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை