வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்தம் இன்று உருவாகிறது: தமிழகத்தில் மழை தொடரும்’

சென்னை:  தெற்கு அந்தமான் அருகே வங்க கடலில் புதியதாக ஒரு காற்றழுத்தம் இன்று  உருவாகும்.  இது மேலும் வலுப்பெற்று   சென்னை அருகே, நாளை நெருங்கி வரும் என்பதால் வட தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களில் இரண்டு காற்றழுத்தங்கள் உருவாகி, மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய ஒட்டு மொத்த மழையும், இந்த 11 நாட்களில் கூடுதலாகவே பெய்துவிட்டது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி விட்டன. பெரும்பாலான மாவட்டங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும், விளைநிலங்களிலும் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், வங்கக்கடலில் நிலைக்கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் மாலை சென்னைக்கும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிக்கும் இடையே கரையைக் கடந்து, தற்போது ஒடிசா கடலோரப் பகுதியில் நிலை கொண்டு அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடந்து சென்றாலும், தமிழகத்தின் சில இடங்களில் இன்னும் மழை நீடித்து  வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையில் 4 இடங்களில் மிக கனமழையும், 24 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.  அதிகபட்சமாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 150மிமீ மழை பதிவாகியுள்ளது. ஏற்காடு 140மிமீ, பெருஞ்சாணி அணை, புத்தன் அணை 130மிமீ, திருத்தணி 120மிமீ, வாலாஜா, பள்ளிப்பட்டு  110 மிமீ, மயிலாடி, சோழவரம், கலசபாக்கம் 100மிமீ, கும்மிடிப்பூண்டி 90மிமீ, சென்னை டிஜிபி அலுவலகம், ஊத்துக்கோட்டை, 80மிமீ, சென்னை எம்ஜிஆர் நகர், அயனாவரம், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம், காஞ்சிபுரம், கலவை, செங்குன்றம், சோளிங்கர், அரக்கோணம், பொன்னேரி 70மிமீ, சென்னை எம்ஆர்சி நகர், ஸ்ரீபெரும்புதூர், திருவாலங்காடு, தரமணி, திருக்கழுக்குன்றம், சென்னை நுங்கம்பாக்கம், ஆலந்தூர் 60மிமீ மழை பெய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரையில், பெரும்பாலான இடங்களில் நேற்று  காலையில்  இருந்தே வெயில் நிலவினாலும், சில இடங்களில் மழை பெய்தது. இதையடுத்து,  நீர் தேங்கிய பகுதிகள் தவிர மற்ற இடங்களில் பொதுப்போக்குவரத்து செயல்படத் தொடங்கியுள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அவை திறக்கப்படவில்லை. வழக்கம்போல  கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நேற்று  செயல்படத் தொடங்கியுள்ளன. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வடியத் தொடங்கியுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலவுகிறது. அதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஓரிரு இடங்களிலும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்தது. இன்றும் தமிழகத்தில் 19 மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்புள்ளது.   இந்நிலையில், வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது, இன்று காற்றழுத்தமாக மாறும். பின்னர் அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும். பின்னர்  வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னையை ஒட்டிய கடலோரப் பகுதிக்கு நாளை  நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வரும்போது சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யும்.அக்டோபர் முதல் நேற்று வரை சென்னை, காரைக்காலில் அதிகபட்ச மழைதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரை பெய்த மழையில் அதிகபட்சமாக சென்னையில் 810 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல பல மாவட்டங்களிலும் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: சென்னையில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை 438 மிமீ, பெய்தமழை 810மிமீ, செங்கல்பட்டு மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை 392 மிமீ- பெய்த மழை 714 மிமீ, காஞ்சிபுரம் இயல்பாக பெய்ய வேண்டியது 336 மிமீ- பெய்தது 501 மிமீ, கடலூர் மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை 356 மிமீ, பெய்த மழை 682 மிமீ, கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை 368 மிமீ- பெய்த மழை 627மிமீ, மயிலாடுதுறையில் இயல்பாக பெய்ய வேண்டியது 419 மிமீ -பெய்த மழை 691 மிமீ, நாகப்பட்டிணத்தில் இயல்பாக பெய்ய வேண்டியது 450மிமீ- பெய்த மழை 785 மிமீ, திருவள்ளூர் மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டியது 357 மிமீ- பெய்த மழை 615 மிமீ, திருவாரூர் மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டியது 337 மிமீ- பெய்த மழை 692 மிமீ, விழுப்புரம் மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டியது 297 மிமீ- பெய்த மழை 655 மிமீ மழை பெய்துள்ளது.இத தவிர புதுச்சேரியில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை 444 மிமீ- பெய்த மழை 826 மிமீ, காரைக்காலில் இயல்பாக பெய்ய வேண்டியது 519 மிமீ- பெய்த மழை 975 மிமீ மழை பெய்துள்ளது. இதுதான் அதிக பட்சமழை என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்