லிப்ட் கொடுப்பது போல் நடித்து எலக்ட்ரீசியனிடம் பணம்,நகை பறிப்பு: சிறுவன் உட்பட மூவர் கைது

மேட்டுப்பாளையம்,ஜன.25:மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில் உள்ள கருப்பராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார்(44). இவருக்கு மனைவியும், ஒரு மகனும்,ஒரு மகளும் உள்ளனர். செந்தில்குமார் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 21ம் தேதி இரவு மது அருந்துவதற்காக அபிராமி தியேட்டர் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார்.

பின்னர்,மது அருந்தி விட்டு அங்கு அமர்ந்துள்ளார்.அப்போது,அங்கு மோட்டார் பைக்கில் வந்த மூவர் அவருக்கு லிப்ட் கொடுப்பது போல் நடித்து அழைத்துச் சென்றுள்ளனர். அவரை ஏற்றிக் கொண்டு சற்று தூரம் சென்ற அவர்கள் பின்னர் இடைஞ்சலாக இருப்பதாக கூறி இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். அப்போது,செந்தில்குமார் தனது சட்டை பாக்கெட்டில் பார்த்த போது பாக்கெட்டில் வைத்திருந்த பணம் ரூ.1500 மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 39 கிராம் வெள்ளி செயின் திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் அபிராமி தியேட்டர் அருகே இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மூவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் அவர்கள் காரமடை சாலையைச் சேர்ந்த கார்த்திக் (எ) ஸ்டீல் கார்த்திக்(29), கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த பிரபு(25) மற்றும் கோவிந்தசாமி நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், இவர்கள் மூவர் மீதும் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் வெள்ளிச்செயினை பறிமுதல் செய்தனர். பின்னர்,மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இளைஞர்களை கோவை மத்திய சிறையிலும், சிறுவனை கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது