லால்குடி அருகே விஏஓ, கிராம உதவியாளர் மீது தாக்குதல்

லால்குடி, ஆக. 30: லால்குடி அருகே விஏஓ, கிராம உதவியாளரை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே டி.கல்விக்குடி வருவாய் கிராம விஏஓ வாக சரவணன் (48) உள்ளார். கடந்த 2 வருடங்களாக பணிபுரியும் இவர், நத்தமாங்குடி வருவாய் கிராம பொறுப்பு விஏஓ வாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், நத்தமாங்குடி பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் எழில்நிலவன் (33) என்பவர், தனது வீட்டிற்கு புதிய மின் இணைப்பு பெற, சில ஆவணங்கள் தேவைப்படுவதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஏஓ சரவணனை அணுகியுள்ளார்.

அப்போது, கலைஞர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண்களின் விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் வருமாறு எழிலிடம் விஏஓ கூறினார். இதையடுத்து நேற்று 29ம்தேதி மதியம் டி.கல்விக்குடி விஏஓ அலுவலகத்துக்கு சென்ற எழில் நிலவன், அங்கு பணியில் இருந்த சரவணனிடம், இன்றைக்காவது மின் இணைப்பு பெற ஆவணங்களை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு விஏஓ சரவணன் இன்றும் பணிகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த எழில்நிலவன் அந்த வேலை தான் முக்கியமா? என் வேலை முக்கியம் இல்லையா? என்று விஏஓ விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது விஏஓ சரவணனை எழில் தாக்கியுள்ளார். அதை தடுக்க முயன்ற கிராம உதவியாளர் கோகிலாவையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த விஏஓ சரவணன், கிராம உதவியாளர் கோகிலா ஆகியோர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் விசாரணை நடத்தி விஏஓ, கிராம உதவியாளரை தாக்கிய நபரை தேடி வருகின்றனர்.

Related posts

பழையகோட்டை கிராமத்தில் வேளாண் திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு

கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டிடம் திறப்பு

வையம்பட்டி வட்டத்தில் இலவச மின் இணைப்பு: துணை இயக்குநர் ஆய்வு