Friday, July 5, 2024
Home » ரோமன் ஹாலிடே

ரோமன் ஹாலிடே

by kannappan

நன்றி குங்குமம் தோழி சில படங்களை நீங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கலாம். மகிழ்ச்சியான நேரங்களில் பார்க்கும் போது மகிழ்ச்சி பல மடங்காகிவிடும். வேதனையான தருணங்களில் பார்க்கும் போது நம் வேதனை அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்களோடு கரைந்து விடும். மகிழ்ச்சியை அதிகப்படுத்துவதும், வேதனையை கரைய வைப்பதும் காதலுக்கே உரித்தான பொதுவான தன்மை. இந்த தன்மை அந்த திரைப்படங்களிலும் காணக்கிடைக்கிறது. அந்தப் படங்கள் கூட பெரும்பாலும் காதலை மையமாக வைத்த காவியமாகவே இருக்கிறது. அப்படியான ஒரு படம் தான் ‘ரோமன் ஹாலிடே’.ஒரு பெண் இளவரசியாகவே இருந்தாலும் அவள் ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தாக வேண்டிய அவலச் சூழலையும் இந்தப் படம் கோடிட்டுக் காட்டுகிறது. மிக எளிமையான படத்தின் கதைக்குள் செல்வோம். நான்கு மாபெரும் சுவர்களுக்குள் ஒரு இயந்திரம் போல தன்னை மற்றவர்கள் இயக்குவது இளவரசிக்குப் பிடிப்பதில்லை. எப்படியாவது அரண்மனையை விட்டு வெளியேறிட வேண்டும் என்பது அவளது கனவு. அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஒரு நாள் இளவரசி தன் சகாக்களுடன் ரோமிற்குச் சுற்றுப்பயணமாக வருகிறாள். ரோமின் அழகில் மயங்குகிறாள். இதுதான் சரியான நேரம் என்று தன்னுடன் வந்தவர்கள் எல்லோரும் உறங்கிய பிறகு யாருக்கும் தெரியாமல் நான்கு சுவர்களை விட்டு வெளியேறுகிறாள். ஒரு பறவையைப் போல நகரம் முழுவதும் சுற்றித் திரிகிறாள். ஓர் அனாதையைப் போல தெருவில் தன்னந்தனியாக உறங்குகிறாள். வாழ்க்கையில் முதல் முறையாக மகிழ்ச்சியை, சுதந்திரத்தை சுவாசிக்கிறாள். அரண்மனையைவிட வெட்டவெளியில், அதுவும் ப்ளாட்பார்மில் உறங்குவது அவளுக்கு சுகமாக இருக்கிறது. இளவரசி தெருவோரமாக உறங்கி கிடப்பதை எதேச்சையாக அந்த வழியாக வரும் பத்திரிகையாளன் ஒருவன் பார்த்து விடுகிறான். நாளைக்குத் தான் பேட்டி எடுக்க போகும் இளவரசிதான் தெருவில் படுத்துக்கிடக்கிறாள் என்று அறியாமல் அவளின் பாதுகாப்பிற்காக தன்னுடைய அறைக்கு அழைத்து வந்துவிடுகிறான். இளவரசி காணாமல் போன விஷயத்தில் அரண்மனையே பரபரப்பாகிறது. விஷயம் வெளியே தெரிந்தால் மானக்கேடு ஆகிவிடும் என்று அரண்மனை நிர்வாகிகள் ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். அடுத்த நாள் இளவரசி காணாமல் போனதை மறைக்க அரண்மனையில் இருந்து, ‘‘இளவரசி நேற்று இரவில் இருந்து உடல் நிலை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். அதனால் இளவரசியின் அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்படுகிறது…’’ என்ற பொய் செய்தி அனைத்து நாளிதழ்களிலும் தலையங்கமாக வெளியாகிறது. இதையெல்லாம் அறிந்து கொள்ளாத பத்திரிகையாளன் இளவரசியை பேட்டி எடுக்க ஆயத்தமாகிறான். ஆனால், தாமதமாகி விட்டதால் பேட்டி எடுக்காமலே பிரமாதமாக இளவரசியை பேட்டி எடுத்து வந்துவிட்டேன் என்று தன் அலுவலகத்தில் உயர் அதிகாரியிடம் புருடா விடுகிறான். ‘‘இளவரசி உடல் நிலை சரியில்லாததால் இன்றைய அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டது…’’ என்ற செய்தி இளவரசியின் புகைப்படத்துடன் நாளிதழில் வெளிவந்து இருப்பதை பத்திரிகையாளனிடம் அந்த அதிகாரி காட்டுகிறார். புகைப்படத்தை பார்த்தவுடன் பத்திரிகையாளன் அதிர்ச்சி அடைகிறான். நேற்று தெருவில் உறங்கிக் கிடந்த பெண் தான் இளவரசி என உணர்கிறான். தன் அதிகாரியிடம் இளவரசியின் அன்றாட நிகழ்வுகளை, புகைப்படத்துடன் ஒரு முழுமையான பேட்டி எடுத்து வருகிறேன் என்று சவால் விடுகிறான். அதற்காக ஒரு தொகையை தனது உயர் அதிகாரியிடம் பேரம் பேசுகிறான். அந்த அதிகாரியும் சவாலை ஏற்றுக்கொள்கிறார். ஏனென்றால் அவர் இளவரசிக்கு உடல்நிலை சரியில்லை என்ற அரண்மனையின் செய்தியை முழுமையாக நம்புகிறார். பணத்திற்காக தனது புகைப்பட நண்பனுடன்; இளவரசியைப் பின் தொடருகிறான் பத்திரிகையாளன். இளவரசியின் ஒவ்வொரு செயலையும் அந்தப் புகைப்படக்காரன் ரகசியமாக புகைப்படமெடுக்கிறான். ஆனால், இளவரசி பத்திரிகையாளனுடன் சகஜமாக பழகுகிறாள். தான் ஒரு இளவரசி என்பதை அவள் ஒருபோதும் வெளியே காட்டுவதில்லை. ஒரு கட்டத்தில் பத்திரிகையாளனுக்கும் இளவரசிக்கும் இடையே காதல் மலர்கிறது. பத்திரிகையாளன் சவாலில் வெற்றிபெற்றானா? அவனின் காதல் நிறைவேறியதா? இளவரசி அரண்மனைக்குத் திரும்பினாளா என்பதே மீதிப் படம்.மிகவும் உணர்வுப்பூர்வமான காதல் கதையை மிகுந்த நகைச்சுவையுடன் செதுக்கியிருப்பார் இயக்குனர் வில்லியம் வைலர். இளவரசியாக நடித்த ஆத்ரே ஹெப்பர்னின் நடிப்புக்காக அந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்தக் கதையை வைத்து ஆயிரக்கணக்கில் படங்கள் வந்துவிட்டன. ஆனால், இந்தப் படம் இன்னும் ஸ்பெஷலாகவே இருக்கிறது அதன் நகைச்சுவைக்காகவும், இயல்பான க்ளைமாக்ஸுக்காகவும். முக்கியமாக இளவரசியாக நடித்த ஆத்ரே ஹெப்பர்னுக்காகவும்.தொகுப்பு: த. சக்திவேல்

You may also like

Leave a Comment

one × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi