ரேஷன் கடைகளுக்கு எடை குறைத்து அனுப்பப்படும் பொருட்கள்-50 கிலோ மூட்டையில் 6 கிலோ மாயம், பொங்கல் பொருட்கள் பாதியாவது கிடைக்குமா?

குலசேகரம் : குமரி மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளுக்கு விநியோகிப்பதற்கு  வரும் அரிசி மற்றும் உணவு பொருட்கள்  கோணம், உடையார்விளை, காப்புகாடு போன்ற  பகுதிகளிலுள்ள குடோன்களில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த  குடோன்களிலிருந்து ரேஷன் கடைகளுக்கு தேவைக்கேற்ப சப்ளை செய்யப்படுகிறது.  இவ்வாறு சப்ளை செய்யும் போது அரிசி மற்றும் பொருட்களின் எடை சரியாக உள்ளதா?  என்பதை உறுதிபடுத்தி சம்மந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும்.  ஆனால் அவ்வாறு செய்யப்படுவதில்லை. 50 கிலோ எடையுள்ள மூடையில் 6 கிலோ வரை  எடை குறைவாக உள்ளது. இவ்வாறு எடை குறைவாக பொருட்கள் சப்ளை செய்யப்படுவதை  சம்மந்தப்பட்ட ரேஷன்  கடை ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு  சென்றாலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. புகார் செய்யும் ஊழியர்கள்களின்  கடைகளுக்கு வேண்டுமென்றே பொருட்கள் சரியாக அனுப்பாமல் காலதாமதபடுத்தி  பழிவாங்கப்படுகிறார்கள். இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் புகார் செய்வதை விட்டு  விட்டு எடை குறைப்பை பொதுமக்களிடம் திணித்து தாங்களும் லாபம்  பார்க்கிறார்கள். பொருட்கள் எடை குறைவாக இருப்பதை தட்டி கேட்டால்  மூட்டைகளில் எடை குறைவாக வருவதை காட்டி பொதுமக்களின் வாயை அடைத்து  விடுகின்றனர்.இதனால் பொதுமக்கள்  கிடைப்பதை வாங்கி கொண்டு செல்கின்றனர். இவ்வாறு மூட்டைகளிலிருந்து  திருட்டுத்தனமாக எடுக்கப்படும் பொருட்கள் மொத்தமாக கடத்தல் கும்பல்களின்  கைகளுக்கு சென்று விடுகிறது. இதற்கு கீழ் மட்டத்திலிருந்து உயர்  மட்டத்திலுள்ளவர்கள் வரை உடந்தையாக உள்ளனர்.இந்தநிலையில் தமிழக அரசு பொங்கல் பரிசாக ₹ 2500 மற்றும் ஒரு கிலோ  சர்க்கரை, ஒரு கிலோ பச்சை அரிசி, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்  திராட்சை, 5 கிராம் ஏலக்காய் இவைகளை ஒரு பையில் வைத்து சராசரியாக 5 அடி  நீளமுள்ள கரும்பு ஒன்று என வழங்க வேண்டும். இதற்காக ரேஷன் கடைகளுக்கு  அனுப்பப்பட்ட பொருட்கள் மூட்டைகளில் வழக்கத்தைவிட குறைவாக உள்ளது. 100 கிலோ  முந்திரி பருப்பு அனுப்பி உள்ளதாக கணக்கு வைக்கிறார்கள். ஆனால் 80 கிலோ  மட்டும் தான் கடைக்கு வந்துள்ளது. எல்லா பொருட்களும் இதே நிலையில் தான்  உள்ளது. இதேபோன்று 20 எண்ணம் கொண்ட கரும்பு கட்டில் கட்டுக்கு தகுந்தார்  போல் 1 முதல் 3 வரை குறைவாக உள்ளது. இதில் ரேஷன் கடை ஊழியர்கள், கடையை  நிர்வாகிக்கும் கூட்டுறவு சங்கத்தினர் என பலருக்கு பார்சல்கள் செல்ல  வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்ட எடையில் பாதி  அளவாவது கிடைக்குமா? என்பது கேள்வி குறியாக உள்ளது. இதனால் இதனை தீவிரமாக  கண்காணித்து ரேஷனில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இதர  நாட்களில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் எடை குறைவின்றி  முழுமையாக கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.பாக்கெட்களில் அடைத்து வழங்க வேண்டும் இது குறித்து குமரி மேற்கு மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்  ஜாண்சன் கூறுகையில்.   கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களுக்கு  வழங்கப்பட்ட பொங்கல் பரிசில் ரேஷன் கடைகளில்  5 கிராம் ஏலக்காய்க்கு 5  எண்ணம் வழங்கப்பட்டது. இதேபோன்று 20 கிராம் முந்திரி பருப்புக்கு 8 கிராம்,  20 கிராம் திராட்சைக்கு 8 கிராம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அவ்வாறு  நடைபெறாமல் இருக்க இவைகளை சரியான எடையில் பாக்கெட்களில் அடைத்து வழங்க  வேண்டும். இதேபோன்று குடோன்களிலிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்  பொருட்களின் எடை அளவுகள் சரியாக உள்ளதா என்பதை கண்காணித்து நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும்  பொருட்கள் சரியாக கிடைப்பதை அரசு உறுதிபடுத்த வேண்டும்.ரேஷன் கடை ஊழியர்கள் குமுறல் இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் தரப்பில் கூறுகையில்,  குடோன்களிலிருந்து அனுப்பப்படும் மூடைகளில் அளவு குறைவு ஒரு புறமிருக்க  மாதம் தோறும் கடைகளுக்கு தேவையான ஒதுக்கீடுகளுக்கு செல்லும்போது வட்ட  வழங்கல் அலுவலகங்களை தனியாக கவனிக்க வேண்டும். அவ்வப்போது ஆய்வுக்கு  வருபவர்களை தனியாக கவனிக்க வேண்டும் உதவியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க  வேண்டும். இப்படி இருக்கும்போது எப்படி பொதுமக்களுக்கு உண்மையாக இருக்க  முடியும் என்று குமுறுகின்றனர்….

Related posts

குறைவான வரி செலுத்தி மோசடி: ஆம்னி பேருந்து பறிமுதல்

முன்னாள் திமுக பொறுப்பு குழு உறுப்பினர் இல்ல திருமண விழா: மணமக்களை வாழ்த்திய ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ

லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் பலி