ரூ35 லட்சம் வீண்? திற்பரப்பில் செயல்படாத இசை நீரூற்று: சீரமைக்க கோரிக்கை

அருமனை: குமரியில்  உள்ள சுற்றுலாத்தலங்களில் திற்பரப்பு அருவியும் மிக முக்கியமான ஒன்று.  இங்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். உள்ளூர்  மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர சுற்றுலாத்துறை மேம்பாட்டு கழகமும்  வசதிகளை செய்து வருகிறது. இது போல் கடந்த 2010ம் ஆண்டு சுற்றுலா  மேம்பாடு திட்டத்தின் கீழ் கடையால் பேரூராட்சி சார்பாக மியூசிக்கல் பவுண்டன்  என்ற திட்டம் அருவியின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் வகையில் சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இசைக்கு  ஏற்ப நடனமாடும் நீர் தொழில்நுட்பத்துடன் இத்திட்டம் அமைக்கப்பட்டது. 2010  ஏப்ரல் 12ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கபட்டது. திறந்து  வைக்கப்பட்ட ஓரிரு ஆண்டிலே பழுதுகள் காரணமாக அவ்வப்போது நிறுத்தி  வைக்கப்பட்டது.  அதன் பின்னர் இதுவரையிலும் சுமார் 10 – வருடங்களாக  செயல்படாத நிலையில் நிறுத்தியே வைக்கப்பட்டுள்ளது. பழுதுகள் சரி  செய்யப்படாமல் எந்த ஒரு சீரமைப்பு பணிகளும் செய்யாமல், நீண்ட நாட்களாக செயல்படாமல் இருப்பதால் அதில் வைக்கப்பட்டிருக்கும் சில இயந்திர பாகங்கள்  துரு பிடித்து உள்ளன. இனி இதில்  உள்ள பழுதுகள் சரி செய்ய பட்டாலும்  சரியாக இயங்குமா என்பது சந்தேகம் தான். சுழற்சியாக இயங்கும்  இயந்திரத்தில்  உள்ள பல பாகங்களை காணவும் இல்லை. இனியும்  இது சரி  செய்ய படவில்லை என்றால் இதில் உள்ள பல பகுதிகள் வீணாகி போகவும், திருட்டுக்கள் நடக்கவும் வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.  எப்படியும் வீணாவது மக்கள் பணம் தான் எனவும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே கடையால் பேரூராட்சி நிர்வாகம் இதனை உடனடியாக சீரமைக்கும் பணியை மேற்கொண்டு மக்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கடையால் பேரூராட்சி நிர்வாக அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட போது இது குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்….

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்