ரூ.90 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி தருவதாக ஆசை காட்டி சென்னை தொழிலதிபரிடம் பணம் பறிப்பு

சென்னை: போலீஸ் சீருடையில் வந்த கும்பல் சென்னை தொழிலதிபரிடம் ரூ.45 லட்சம் பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். தங்களிடம் கோடிக்கணக்கில் 2,000 ரூபாய் நோட்டுக்களாக கருப்பு பணம் உள்ளதாக ஆசை காட்டி மோசடி செய்துள்ளனர். சென்னையை சேர்ந்தவர் தொழிலதிபர் அசோக். இவரது தொழில் கூட்டாளி கேரளாவை சேர்ந்த முகமது. இவர்கள் இருவரும் இணைந்து வளைகுடா நாடுகளுக்கு பலசரக்கு பொருட்களை மொத்தமாக ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்த நிலையில் முகமதுவை கேரளாவை சேர்ந்த சாய்கிருஷ்ணா என்பவர் சந்தித்து பேசியுள்ளார்.அப்போது 2,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை விரைவில் ரிசர்வ் வங்கி வெளியிடப்போவதாகவும் தங்களிடம் ஏராளமான அளவுக்கு 2,000 ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த 2,000 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் எனவும் கூறியுள்ளனர். எனவே நீங்கள் உங்களிடம் உள்ள 90 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுக்களை எங்களிடம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுக்களை தருகிறோம் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். அதனை முகமது நம்பி விட்டார். அதோடு மட்டுமல்லாமல் தம்முடைய தொழில் கூட்டாளியான அசோக்கிற்கும் அதுபற்றி தெரிவித்திருக்கிறார்.அவரும் இதற்கு உடன்பட்டுவிட்டார். இதன்படி கடந்த ஜூன் 30ஆம் தேதி வேலூரில் உள்ள ஒரு லாட்சில் தங்கியுள்ளனர். அங்கு அவர்களை சாய்கிருஷ்ணா மற்றும் நரேஷ்குமார் உள்ளிட்ட சிலர் சந்தித்து பேசியுள்ளனர். ஜூலை 1ஆம் தேதி சித்தூர் – வேலூர் சாலையிலுள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே வரும்படியும் அங்கு தாங்கள் கூறியபடி ஒரு கோடி ரூபாய் பணத்தை தருவதாகவும் கூறியுள்ளனர். அதன்படி இருவரும் சென்றபோது 45 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர். இந்த சமயத்தில் போலீஸ் வருவதாக கூறி பணத்தை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துவிட்டனர். அவர்கள் கூறியபடியே அந்த இடத்திற்கு போலீஸ் ஜீப் ஒன்று வந்துள்ளது. அதிலிருந்து போலீஸ் சீருடையிலும் சிலர் இறங்கியுள்ளனர்.அதனை உண்மை என்று நம்பிவிட்ட அசோக்கும், முகமதுவும் என்ன செய்வது என்று தவித்துள்ளனர். பின்னர் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதும் மோசடி செய்யப்பட்டதும் தெரியவந்தது. எனவே இதுகுறித்து சித்தூர் போலீசில் புகார் கூறினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் சித்தூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மோசடி கும்பலை சேர்ந்த சிலர் சிக்கினர். அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஒட்டுமொத்த கும்பலையும் மடக்கிப்பிடித்தனர். 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 32 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 10 செல்போன்கள், போலீஸ் சீருடைகள், போலீஸ் பயன்படுத்தும் லத்தி, தொப்பி போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கும்பலின் மூளையாக செயல்பட்ட கோவையை சேர்ந்த சாய்கிருஷ்ணா தலைமறைவாகிவிட்டார்.அவரை தேடி வருவதாக சித்தூர் போலீசார் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திர எல்லையில் இதுபோன்ற மோசடிகள் அரங்கேறி வருவதாகவும் எனவே உஷாராக இருக்குமாறும் ஆந்திர போலீசார் எச்சரித்துள்ளனர். கைதானவர்கள் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வாலாஜா போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள். எனவே தமிழ்நாட்டில் போலீஸ் சீருடையை பயன்படுத்தி இதுபோன்ற மோசடிகள் நடைபெறுவதால் இதன் பின்னணியில் உள்ள மற்றவர்களை வளைக்கவும் அதேபோன்று தப்பியோடிய கோவையை சேர்ந்த சாய்கிருஷ்ணாவை பிடிக்கவும் தமிழக போலீசாரின் உதவியையும் ஆந்திர போலீசார் கோரி இருப்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது