ரூ.6 லட்சம் கடனுக்கு ரூ.14 லட்சம் வசூல் கந்து வட்டி கொடுமையால் கதறும் குடும்பம்: பணத்தை தராவிட்டால் மகளை கடத்துவதாக மிரட்டல்: எஸ்பியிடம் பெண் புகார்

காஞ்சிபுரம்: ₹6 லட்சம் கடனுக்கு ₹14 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பணத்தை தராவிட்டால், தனது 11 வயது மகளை கடுத்துவதாக கடன்காரர் மிரட்டுவதாக, காஞ்சிபுரம் எஸ்பியிடம் பெண் புகார் அளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே ராஜவீதி தெருவை சேர்ந்த பத்மாவதி. நேற்று காஞ்சிபுரம் எஸ்பி சுதாகரிடம், பத்மாவதி ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே ராஜவீதி தெருவில் வசிக்கிறேன். அதே பகுதியில் சிற்பம் செய்யும் தொழில் செய்து வருகிறேன். தொழில் வளர்ச்சிக்காக, கடந்த 2019ம் ஆண்டு  திருமுக்கூடல் பகுதியை சேர்ந்த பார்கவி என்பவரிடம் ₹6 லட்சம் கடன் பெற்றேன். நான் சரியாக வட்டி கொடுத்து வருவதை பார்த்த பார்கவி, 2 பைசா வட்டியை 6 பைசாவாக வட்டி கொடுக்கும்படி வற்புறுத்தினார். நானும், வேறு வழியின்றி பணத்தை கட்டினேன். ஒரு கட்டத்தில் எனது தொழிலும் முடக்கம் ஏற்பட, வட்டிகொடுக்க முடியமால் பரிதவித்தேன்.அப்போது பார்கவி, தன்னிடம் சீட்டில் சேர வேண்டும் என கட்டாயப்படுத்தினார். மேலும், சீட்டில் விழும் முழு தொகையை தனது வட்டியை அடைக்க வேண்டும் என கூறினார். இக்கட்டான சூழ்நிலையில் தவித்த நான், சீட்டு கட்ட தொடங்கி அதில் வரும் தொகையை வாங்கி வட்டி கொடுத்தேன். பின்னர் அவர், வார வட்டி, மாத வட்டி என பல்வேறு வகையில் பணத்தை வசூல் செய்தார். இதுபற்றி வெளியில் சொன்னால் தங்களுக்கு அவமானம் ஏற்படுவது மட்டுமின்றி, வட்டிக்கு  பணம் கொடுத்தவர் ஏதாவது செய்து விடுவரோ என்ற பயத்தில் இருந்தேன்.இந்தவேளையில், தொழிலுக்கு பயன்படுத்தி வந்த லாரியையும் வட்டிக்காக அடமானம் வைத்து, அதில் வரும் தொகையை கொடுத்தேன். மேலும் 10 சவரன் நகையை வட்டிக்கு பணம் கட்டி இழந்தேன். இதுபோல் ₹6 லட்சம் கடனுக்கு ₹14 லட்சம் வரை வட்டி மட்டும் கட்டியுள்ளேன். வாங்கிய பணத்தை முழுவதுமாக கட்ட வலியுறுத்தி பார்கவி, தொடர்ந்து மிரட்டுகிறார். பணம் தராவிட்டால், எனது 11 வயது மகளை கடத்தி செல்வதாக மிரட்டுகிறார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது….

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு