ரூ.350 மற்றும் ரூ.365 என்ற விலையில் தமிழக அரசின் புதிய ரக சிமென்ட் வலிமை என்ற பெயரில் அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை: நவீன தொழில்நுட்பத்தில் தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘வலிமை’ என்ற பெயரில் புதிய சிமென்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விற்பனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இந்த சிமென்ட் ரூ.350, ரூ.365 என இரண்டு விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் சிமென்ட் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் குறைந்த விலையில் சிமென்ட் விற்பனை செய்யப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாடு சிமென்ட்ஸ் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆலங்குளம் சிமென்ட் ஆலை, ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறனுடன், அப்போதைய முதலமைச்சர் கலைஞரால் 1970ம் ஆண்டில் துவக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு சிமென்ட் கழகத்தால், அரியலூரில் ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறனுடன் ஒரு ஆலையும், 10 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட மற்றொரு புதிய சிமென்ட் ஆலையும் நிறுவப்பட்டது. இந்த மூன்று ஆலைகளின் மொத்த உற்பத்தி திறன் ஆண்டு ஒன்றுக்கு 17 லட்சம் மெட்ரிக் டன் ஆகும்.  தமிழ்நாடு சிமென்ட்ஸ் கழகம் ‘அரசு’ என்ற பெயரில் சிமென்ட்டை விற்பனை செய்து வருகிறது. 2021-22ம் ஆண்டு தொழில் துறை மானிய கோரிக்கையின்போது, “வலிமை” என்ற பெயரில் ஒரு புதிய ரக சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர ‘வலிமை’  சிமெண்ட் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய ரக ‘வலிமை’ சிமெண்ட் விற்பனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று துவக்கி வைத்தார்.தமிழக அரசு சார்பில் நவீன தொழில்நுட்பத்தில் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘வலிமை’ சிமென்ட் குறித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சிமென்ட் கழகம் சார்பில் ‘வலிமை’ என்கிற பெயரில் புதிய பிராண்ட் சிமென்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.  இந்த வலிமை சிமென்ட் , சிறந்த தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ‘வலிமை’ சிமென்ட் அதிக உறுதி தன்மையும், விரைவில் உலரும் தன்மையும், அதிக அளவு வெப்பத்தையும் தாங்கக்கூடியதாகவும் இருப்பது இதன் தனி சிறப்பு. இரண்டு விதங்களில் இந்த சிமென்டை சந்தையில் இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சிமென்டை சந்தைக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதேபோல் இந்த சிமென்ட் வெளி சந்தையிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் விலையை பொறுத்தமட்டில் ஒரு மூட்டைக்கு ரூ.350க்கும், ரூ.365க்கும் விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்துள்ளோம்.மேலும், மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை எல்லோரும் குறைந்த விலையில் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு இந்த சிமென்ட் இருக்கும். வேறு எந்த சிமென்ட் நிறுவனத்தையும் ஒப்பீட்டு பார்க்கையில், சிறந்த தரத்தோடும், எல்லோரும் வாங்கக்கூடிய விலை அமைப்போடும் இந்த சிமென்டை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அறிமுக்கப்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் நிர்வாக இயக்குநர் னில் மேஷ்ராம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு ஒரு சிமென்ட் மூட்டை ரூ.350க்கும், ரூ.365க்கும் விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்துள்ளோம்.* தனியாருக்கு ஈடுகொடுக்கும் வகையில் வலிமை சிமென்ட்புதிய தொழில்நுட்பம், மூலப்பொருட்களின் விலையை கணக்கில் கொண்டு வலிமை சிமென்ட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு  கட்டுமானங்கள் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்மா சிமென்ட் என்பதும் அரசு சிமென்ட்தான். அந்த திட்டமும் தொடரும். வலிமை என்ற பெயரில் புதிய பிராண்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்லா கம்பெனிக்கும் ஈடுகொடுக்கும் வகையில் வலிமை சிமென்ட் இருக்கும் என்று அமைச்சர் தென்னரசு கூறினார்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்