ரூ.3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜேந்திரபாலாஜியின் வங்கி கணக்குகள் கண்காணிப்பு: உதவும் ஆதரவாளர்கள் குறித்தும் விசாரணை

விருதுநகர்: ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேர் மீது 5 பிரிவுகளில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் தேடி வருகின்றனர்.  அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க தேடப்படும் குற்றவாளி என அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. கடல் வழியாக தப்பி செல்ல வாய்ப்புகள் இருப்பதால் கடலோர கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகள் மூலம் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகிறதா என குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘ராஜேந்திர பாலாஜி மீது 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் விசாரணை நடந்தது. அதனால், கடந்த 4 ஆண்டுகளாக அவரின் வங்கி கணக்குகளில் பரிவர்த்தனைகள் நடக்கவில்லை. தலைமறைவான பின்னரும் வங்கி கணக்குகளில் இருந்து பணப்பரிவர்த்தனை நடக்கவில்லை. இருப்பினும் வங்கி கணக்குகளை கண்காணித்து வருகிறோம். ஆதரவாளர்கள் மூலம் அவரது தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வரலாம். எனவே, அவருக்கு உதவி செய்து வரும் ஆதரவாளர்கள் பக்கம் போலீசாரின் கண்காணிப்பு திரும்பி உள்ளது. அவர்களை கைது செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்’’ என்றனர்….

Related posts

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்