ரூ.20 கோடி மதிப்பீட்டில் ராமநாதபுரத்தில் பஸ் நிலையம் கட்டுவதற்கு பூமிபூஜை விழா

ராமநாதபுரம், ஆக.4: ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜையினை கலெக்டர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார்.ராமநாதபுரம் நகரில் நேற்று நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவில் எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையேற்று புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜையினை துவக்கி வைத்தார்.பின்னர் அவர் தெரிவிக்கையில், ‘‘வளர்ந்து வரும் நகர் பகுதிகளில் ராமநாதபுரம் நகராட்சியும் இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் வந்து செல்லும் வகையில் மையப்பகுதியாக ராமநாதபுரம் இருப்பதால் இங்கு பெரிய அளவில் பேருந்து நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே இருந்து வந்தது. அதனடிப்படையில் தற்போது நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி புதிய பேருந்து நிலையம் 16909.5 சதுரஅடி பரப்பில் கட்டுமான பணிகள்துவங்கியுள்ளது. இதன் மூலம் வெளி மாவட்டங்களான மதுரை, கோயமுத்தூர், திருச்சி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்து ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு சென்று வர இப்பேருந்து நிலையம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்த கட்டுமான பணி முடித்திட ஓரு ஆண்டுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பணிகள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்திட ஏதுவாக பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சாத்தான்குளம் அருகே லோடு ஆட்டோ கண்ணாடி உடைப்பு

நெல்லையில் நாளை இஎஸ்ஐ குறை தீர்க்கும் முகாம்

ஆட்டோ திருடியவர் கைது