ரூ.2 லட்சம் பைக்கை சரிசெய்ய ஆடு திருடிய 2 கல்லூரி மாணவர்கள் கைது

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ளது அயலூர். இங்குள்ள சன்னகுழிமேட்டை சேர்ந்தவர் நாச்சிமுத்து (36). மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி கவுரி (32). இவர்கள் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, மாடுகளை பிடித்து வீட்டின் முன்பு கட்டிவிட்டு சாப்பிட சென்றனர். சிறிது நேரத்தில் ஆடு கத்தும் சத்தம் கேட்டது. இதையடுத்து கவுரி வெளியே வந்து பார்த்தார். அப்போது ஆட்டை 2 வாலிபர்கள் பைக்கில் திருடிச்செல்வது தெரியவந்தது.இதனையடுத்து கவுரி சத்தம்போடவே, உஷரான அக்கம் பக்கத்தினர் நாச்சிமுத்துவுடன் சேர்ந்து வாலிபர்களை விரட்டிப்பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்ப முயன்றனர். அப்போது ஆடு வேகமாக துள்ளவே, பைக்கில் தப்பிய வாலிபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனையடுத்து பொதுமக்கள் வாலிபர்களை மடக்கிப்பிடித்து ஆட்டை மீட்டனர். பிடிபட்ட வாலிபர்களை அங்குள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.தகவல் அறிந்ததும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபர்களை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். விசாரணையில் அவர்கள், திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தை சேர்ந்த சபரி (20), பாலாஜி ஆனந்த கீதன் (20) என்பது தெரியவந்தது. சபரி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டும், பாலாஜி ஆனந்த கீதன் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ஐடி முதலாமாண்டும் படித்து வருகின்றனர்.2 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய பைக் வாங்கி கொடுத்தால்தான் கல்லூரிக்கு செல்வேன் என சபரி பெற்றோரிடம் அடம்பிடித்தார். இதையடுத்து ஆட்டோ டிரைவரான அவரது தந்தை கடந்த மாதம் புதிய பைக் வாங்கி கொடுத்து உள்ளார். நேற்று விடுமுறை என்பதால் நண்பர்களான சபரியும், பாலாஜி ஆனந்த கீதனும் கொடிவேரி அணைக்கு பைக்கில் புறப்பட்டனர். வரும் வழியில் உள்ள கொளப்பலூரில் மது குடித்துள்ளனர். குடிபோதையில் சாலையில் சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது பைக் தவறி விழுந்து நொறுங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் தப்பினர்.சேதமடைந்த பைக்கிலேயே கொடிவேரி அணைக்கு சென்று குளித்துள்ளனர். பின்னர் வீட்டுக்கு புறப்பட்டபோது ரூ.2 லட்சம் புதிய பைக் நொறுங்கியது குறித்து பெற்றோரிடம் என்ன கூறி சமாளிப்பது? என்று யோசித்துக்கொண்டே வந்தனர். அப்போது நாச்சிமுத்துவின் ஆடு தனியாக கட்டியிருந்ததை பார்த்தனர். அதனை திருடி விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பைக்கை சரிசெய்துவிடலாம் என்று அவர்கள் முடிவு செய்து ஆட்டை திருடியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்….

Related posts

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.15 லட்சம் நூதன முறையில் திருட்டு: பெண் பணியாளர் 2 பேர் கைது