ரூ.2 கோடி மோசடியில் சிக்கி சிறையில் உள்ளவர்களுக்கு சீட்: ஈரோடு அதிமுகவில் சர்ச்சை

ஈரோடு: நில மோசடி வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேருக்கு ஈரோடு அதிமுகவில் மாநகராட்சியில் போட்டியிட கட்சி தலைமை சீட் வழங்கி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.ஈரோடு மாநகராட்சியில் அதிமுக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இதன்படி மொத்தமுள்ள 60 வார்டுகளில் அதிமுக போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள தமாகவுக்கு 2 சீட்டாவது கொடுக்க வேண்டும் என்று கடைசி வரை எதிர்பார்த்திருந்த நிலையில், ஒட்டுமொத்த வார்டுகளுக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்திருப்பதால் தமாகாவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனிடையே வேட்பாளர் பட்டியலில் ஏற்கனவே பல முறை போட்டியிட்ட பழைய முகங்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி இருப்பது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், 40வது வார்டு வேட்பாளராக வைரவேல் என்பவரும், 41வது வார்டு வேட்பாளராக முருகசேகர் என்கிற முருகானந்தம் ஆகிய இருவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த இருவரும் ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகளிடம் ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரும் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருப்பது அதிமுகவினர் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சீட் கேட்டு யாரிடம் விண்ணப்பித்தனர், எப்படி நேர்காணல் செய்யப்பட்டது என்பதும் தெரியவில்லை என்று அதிமுக தொண்டர்களே புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள தகவலை கட்சி தலைமைக்கு மறைத்து பட்டியலில் பெயர் இடம் பெறச்செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதே வேளையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரும், பல முறை ஜாமீன் கேட்டும் கோர்ட் மனுவை தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், தற்போது தேர்தலில் போட்டியிடுவதை பயன்படுத்தி ஜாமீன் வாங்கிவிடலாம் என்பதற்காக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது….

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…