Wednesday, July 3, 2024
Home » ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன?

ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன?

by kannappan
Published: Last Updated on

தெளிவு பெறுஓம்ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன?- அயன்புரம் த.சத்தியநாராயணன்.முதலில் அசுரர்கள் என்றால் அவர்கள் ஏதோ ஒரு தனி இனம் என்று எண்ண வேண்டாம். அவர்களும் நம்மைப் போன்று வாழ்ந்த மனிதர்களே. தங்களுடைய தவ வலிமையினாலும், பக்தி சிரத்தையுடன் கூடிய பூஜைகளினாலும், நினைத்துக்கூட பார்க்க இயலாத அளவிற்கு உடம்பை வருத்தி பல விரதங்களை கடைபிடித்ததன் மூலமாகவும் இறைவனிடம் இருந்து வரங்களைப் பெற்று அதன் மூலம் தங்கள் வலிமையை வளர்த்துக்கொண்டவர்கள் அசுரர்கள். அதே நேரத்தில் தாங்கள் பெற்ற வரங்களை தர்மத்திற்கு மாறாகப் பயன்படுத்தியதால் தீய குணங்கள் அவர்களிடம் வளர்ந்தன. காம, க்ரோத, லோப, மோக, மதமாத்சர்யங்கள் போன்ற ராஜஸ குணங்கள் அவர்களிடம் அதிகமாகக் காணப்பட்டதால் அவர்கள் அசுரர்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்கள். இந்த உலகில் நேர்மறை, எதிர்மறை ஆகிய இரண்டு விஷயங்கள் எப்பொழுதும் உண்டு. பகல்-இரவு, இன்பம் – துன்பம், வளமை – வறுமை, நன்மை – தீமை என்று இரு துருவங்கள் எப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்கும். அறிவியல் ரீதியாக பார்த்தோமேயானால் நியூட்டனின் மூன்றாம் விதி கூட for every action there is an equal and opposite reaction   என்று இந்த கருத்தையே வலியுறுத்துகிறது. ஆக இந்த உலகில் நல்ல சக்தி என்ற ஒன்று இருக்கும்போது தீய சக்தி என்ற ஒன்றும் தவறாமல் இடம் பிடித்திருக்கும். இந்த இரு சக்திகளையும் படைத்தது இறைவனே. இவ்விரண்டையும் சரியான தருணங்களில் இயக்கி வெற்றி பெறச் செய்வதோ அல்லது தோல்வியுறச் செய்வதோ இவையனைத்தும் இறைவனின் திருவிளையாடல்களே. எந்த அளவிற்கு கோபம் என்ற குணம் பரமேஸ்வரனிடம் நிறைந்திருக்குமோ அதே அளவிற்கு இரக்கம் என்ற குணமும் அவரிடம் உண்டு. பரமேஸ்வரனுக்கு ஆஷூதோஷி என்று பெயர். அதாவது மிகுதியான சந்தோஷம் கொள்பவர் என்று பெயர். அவர் சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் என்ன வேண்டினாலும் தந்துவிடுவார் என்பதால் அவரை ஆனந்தப்படுத்தும் விதமாக அசுரர்கள் கடுமையான தவம் மேற்கொண்டார்கள். தங்களுடைய மன உறுதியின் மூலமாக பல்வேறு சோதனைகளையும் கடந்து பரமேஸ்வரனை எளிதில் தரிசனம் கண்டு வரங்களைப் பெற்றார்கள். தேவர்களின் ஆணவத்தை அடக்க இவ்வாறு அவ்வப்போது அசுரர்களின் பலத்தைக் கூட்டுவதும், அசுரர்களின் அட்டகாசம் அதிகரித்து தேவர்களுக்கு ஒரு துன்பம் வரும்போது அவர்களைக் காத்து அருள்வதும் இறைவனின் திருவிளையாடல்களே. சாதாரண மனிதர்கள் ஆகிய நம்மிடம் தேவ குணம், அசுர குணம் ஆகிய இரண்டும் கலந்திருக்கும். சத்வ குணம் அதிகரிக்கும்போது தேவர்களுக்கு இணையான உயர்வினைப் பெறுகிறோம். ராஜஸ குணம் அதிகரிக்கும்போது அசுரர்களாக மாறுகிறோம். ஆக, தேவர்கள், அசுரர்கள் என்ற கதாபாத்திரங்கள் அவரவருடைய குணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே அன்றி உருவ அமைப்பினைக் கொண்டு அல்ல. அசுரர்கள் என்றால் தலையில் கொம்பு, நீண்ட பற்கள், பெரிய கண்கள், பருத்த உருவம் இருக்கும் என்றெல்லாம் நாம் கற்பனையாக எண்ணக்கூடாது. அவர்களும் நம்மைப்போன்றே மனிதர்களாக பிறப்பு எடுத்தவர்கள். தங்களுடைய தவ வலிமையினால் இறைவனைக் கண்டு வரங்களைப் பெற்று, தாங்கள் பெற்ற வரங்களை நல்வழியில் பயன்படுத்தாமல், மனதினை அடக்கி ஆளத்தெரியாமல், மனம்போன போக்கில் தவறான பாதையில் நடந்ததால் அசுரர்கள் என்ற பெயருக்கு ஆளானார்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ராவணேஸ்வரன், பஸ்மாசுரன் உட்பட எல்லா அசுரர்களும் இந்த வகையைச் சார்ந்தவர்களே. பரமேஸ்வரன் மிகவும் இரக்க குணம் கொண்டவர் என்பதால் அசுரர்கள் பெரும்பாலும் சிவபக்தர்களாக விளங்கினார்கள்.?சில கோயில்களில் கருவறையில் உள்ள சாமி சிலைகளின் கீழ் மகான்கள் ஸ்ரீ சக்ரம் போன்றவற்றை பதித்திருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா?- மு.மதிவாணன், அரூர்.உண்மைதான். ஸ்ரீ சக்ரம் என்ற யந்திரம் ஆதிபராசக்தியின் அம்சத்தினை உள்ளடக்கியது. அதிலிருந்து வெளிப்படுகின்ற சக்தியே அந்த சிலைகளுக்கு தெய்வீக பலத்தினைத் தருகிறது. பலம் என்ற வார்த்தைக்கே சக்தி என்றுதானே பொருள். இந்த சக்தி இல்லையேல் சிவம் இல்லை, வெறும் சவம்தான் என்பதை மகான்கள் உணர்ந்திருந்தார்கள். அதனால் கோயில்களில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் ஸ்வாமி சிலைகளுக்கு அடியில் ஸ்ரீ சக்ரம் முதலான யந்திரங்களை பதித்து வைத்தார்கள். அதோடு மேரு என்ற கூம்பு வடிவிலான சிறிய மலை போன்ற விக்கிரகத்தினையும் வைத்து பூஜித்தார்கள். இந்த மேரு, ஸ்ரீ சக்ரம் ஆகிய இரண்டும் அன்னை ஆதிபராசக்தியின் அம்சமே ஆகும். ஸ்ரீ சக்ரம் பதிக்கப்பட்டு உள்ள ஆலயங்கள் அனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதோடு புகழ்பெற்ற ஆலயங்களாக விளங்குகின்றன என்பதிலும் ஐயமில்லை.?கோயில்களில் ஐந்து எண்ணெய்களை ஒன்றாகக் கலந்து பஞ்ச தீப எண்ணெய் என்ற பெயரில் விளக்கேற்றுகிறார்களே, இது சரியா?- வண்ணை கணேசன், சென்னை.தவறு. ஒவ்வொரு எண்ணெய்க்கும் தனித்தனியே சிறப்பம்சம் என்பது உண்டு. எள்ளு தானியத்தில் இருந்து நல்லெண்ணெய், ஆமணக்கு கொட்டையில் இருந்து விளக்கெண்ணெய், தென்னை மரத்தின் காய் ஆன தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய், இலுப்பை விதைகளில் இருந்து இலுப்பை எண்ணெய், வேப்பமரத்தின் கொட்டைகளில் இருந்து வேப்ப எண்ணெய் ஆகியவை கிடைக்கின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே மருத்துவ குணங்கள் என்பது உண்டு. இவை அனைத்துமே உண்மையில் உடல் ஆரோக்கியத்தினை கட்டிக்காக்கும் மூலிகைச் சத்து நிறைந்த மருந்துகளே ஆகும். இந்த எண்ணெய்களில் விளக்கேற்றும்போது அதிலிருந்து வெளிப்படும் புகையானது காற்றினில் பரவி நம் உடம்பினில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. அதனை விடுத்து இவற்றை ஒன்றாகக் கலந்து விளக்கேற்றும்போது அதிலிருந்து வெளிப்படும் புகையானது உடம்பிற்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தராமல் மாற்று பலனையே தரும். உதாரணமாக ஜூரத்திற்கு ஒரு மருந்து, வயிற்றுவலிக்கு ஒரு மருந்து, ஜல தோஷத்திற்கு ஒரு மருந்து, முடக்குவாதத்திற்கு ஒரு மருந்து, சர்க்கரை நோயாளிக்கு ஒரு மருந்து, ரத்த அழுத்தத்திற்கு ஒரு மருந்து என ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு விதமான நோய்களைத் தீர்க்க பயன்படும். யார் யாருக்கு எந்த மருந்து தேவையோ அதனை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதனைவிடுத்து எல்லா மருந்தினையும் ஒன்றாகக் கலந்து சாப்பிட்டால் என்னவிதமான பலன் உண்டாகுமோ அதே பலன்தான் இதுபோன்று ஐந்து எண்ணெய்களை கலந்து விளக்கேற்றும்போதும் கிடைக்கும். நமக்கு என்னவிதமான பிரச்னை உள்ளதோ, எந்த பிரச்னை தீரவேண்டும் என்ற பிரார்த்தனையை முன் வைக்கிறோமோ அதற்குரிய எண்ணெயை மட்டும் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். பிரச்னை ஏதுமின்றி எல்லோரும் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும் என்று பொதுவாக உலக நன்மை வேண்டி விளக்கு ஏற்றுபவர்கள் நல்லெண்ணெய் அல்லது சுத்தமான பசு நெய் ஊற்றி விளக்கேற்றி வழிபடலாம். பஞ்சதீப எண்ணெய் ஊற்றித்தான் வழிபடுவேன் என்று நினைப்பவர்கள் இந்த எண்ணெய்களை தனித்தனியே ஒவ்வொரு விளக்கில் ஊற்றி தனித்தனியாக ஐந்து விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடலாம். அதனைவிடுத்த எல்லா எண்ணெய்களையும் ஒன்றாகக் கலந்து விளக்கேற்றினால் எதிர்மறையான பலன்களே விளையும். பொதுவாக எண்ணெய்களை ஒன்றோடொன்று கலக்காமல் தனித்தனியே விளக்கேற்றி வழிபடுவதே சாலச் சிறந்தது.?ஜமதக்னி மகரிஷியின் மனைவியான ரேணுகாதேவியைத்தான் கிராமங்களில் மாரியம்மன் என்று வழிபடுகிறார்களா? – அண்ணா அன்பழகன்,அந்தணப்பேட்டை.ஆம். ஒவ்வொரு மாரியம்மன் ஆலயத்திலும் அமர்ந்த நிலையில் உள்ள அம்மன் சிலையையும், அதற்கு முன்பாக கீழே கழுத்தளவில் உள்ள அம்மன் சிலையையும் காண முடியும். தனது தந்தையான ஜமதக்னி மகரிஷியின் கட்டளையின்படி பரசுராமர் தனது தாயான ரேணுகாதேவியின் தலையை வெட்ட முற்படும்போது ரேணுகாதேவிக்கு அடைக்கலம் தந்திருந்த மற்றொரு பெண்ணின் தலையையும் சேர்த்து வெட்டிவிடுகிறார். தந்தையின் ஆணையினை நிறைவேற்றியபின் பரசுராமர் தான் வெட்டி வீழ்த்திய தாயாரை உயிர்ப்பிக்க வேண்டி தன் தந்தையிடமே வரத்தினைப் பெற்று அவசர அவசரமாகச் செயல்படும்போது இறந்து கிடக்கும் மற்றொரு பெண்ணின் தலையை தன் தாயாரின் உடலோடு மாற்றிப் பொருத்தி மந்திரம் ஜபித்து உயிர்ப்பித்துவிடுகிறார். மற்றொரு பெண்ணின் தலையினை ரேணுகாதேவியின் உடலோடுப் பொருத்தி உயிர்ப்பித்த வடிவமே அமர்ந்திருக்கும் நிலையிலும், தனித்திருக்கும் ரேணுகா தேவியின் தலை அந்த சிலைக்கு முன்பாக கழுத்து வரை உள்ள அம்மனாகவும் மாரியம்மன் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. சிரம் மாறி அமைந்ததால் மாரியம்மன் என்ற பெயர் பெற்றதாக சிலர் கூறுவர். உண்மையில் மாரி என்ற மழையினைத் தருபவளே மாரியம்மன். கீழ்க்கண்ட காயத்ரி மந்திரத்தைச் சொல்லி ரேணுகா பரமேஸ்வரியை வழிபடுவது அதீதமான நன்மையைத் தரும்.“ஜமதக்னி ப்ரியாயைச வித்மஹே ராம மாத்ராய தீமஹி தந்நோ ரேணுகா: ப்ரசோதயாத்”?பி.பி., சுகர் உள்ளவர்கள் விரதத்தை தவிர்த்து சத்துள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதனால் வழக்கமாக நாம் கடைபிடித்து வரும் விரதத்திற்கு பங்கம் வந்துவிடாதா? என்ன செய்வது?- உஷா, திருச்சி.சாப்பிடாமல் இருப்பதற்கு பெயர் விரதம் அல்ல. விரதம் என்பதன் உண்மையான பொருள் மன உறுதி என்பதே. எதன் மீதும் ஆசை கொள்ளாமல், எந்தச் சூழலிலும் மனம் சஞ்சலப்படாமல் இறைவனின் மீது உண்மையான பக்தியைச் செலுத்துவதே விரதம் ஆகும். புகை, மது முதலான தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் கூட சபரிமலைக்கு மாலை அணிந்தால் அனைத்து பழக்கங்களையும் விடுத்து சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள் அல்லவா.., அதுதான் உண்மையான விரதம். பசிக்கிறதே என்று நினைத்துக்கொண்டு சாப்பிடாமல் இருப்பதும், சாப்பிடாமல் வேண்டுமென்றே தன் உடலை வருத்திக் கொள்வதும் உண்மையான விரதம் ஆகாது. சத்துள்ள உணவை உட்கொள்வதால் உங்கள் விரதத்திற்கு எந்தவித பங்கமும் வந்துவிடாது. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகள் விரதம் இருக்கிறேன் பேர்வழி என்று சாப்பிடாமல் இருந்து உடல்நிலையை கெடுத்துக் கொள்வதை விட மருத்துவர்களின் ஆலோசனையின்படி நேரத்திற்கு உணவருந்துவதும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருவதும் நல்லதுதான். இதனால் வழக்கமாக கடைபிடிக்கும் விரதத்திற்கு எந்தவிதமான பங்கமும் வந்து சேராது. விரதநாட்களில் இறை சிந்தனையோடு இருக்க வேண்டும் என்பதுதான் நியதியே தவிர சாப்பிடாமல் இருப்பது அல்ல.?பெரியவர்களை சாஷ்டாங்கமாக வணங்கும்போது அவர்கள் எந்த திசை நோக்கி நிற்க வேண்டும்? நாம் எந்த திசையை நோக்கி வணங்க வேண்டும்? – சிவசுப்ரமணிய சர்மா, கும்பகோணம்.பெரியவர்களை சாஷ்டாங்கமாக வணங்கும்போது காலை முதல் நண்பகல் வரையிலான நேரமாக இருந்தால் அவர்களை மேற்கு நோக்கியும், நண்பகல் முதல் சூரிய அஸ்தமனம் வரையிலான இடைபட்ட நேரத்தில் கிழக்கு நோக்கியும் நிற்கச் செய்வது நல்லது. அதாவது நாம் நமஸ்கரிக்கும்போது நமது தலை இருக்கும் திக்கில் சூரியன் இருக்க வேண்டும். கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரியன் இருக்கும் திக்கில்கால் இருப்பதுபோல நமஸ்கரிக்கக் கூடாது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தெற்கு தவிர மற்ற திசைகளை நோக்கி நாம் நமஸ்கரிக்கலாம். வீட்டில் நமஸ்கரிக்கும்போது நமது கால் பூஜை அறையை நோக்கிச் செல்லக்கூடாது. அதற்கேற்றவாறு பெரியவர்களை நிற்கச் செய்வது நல்லது….

You may also like

Leave a Comment

4 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi