ராமர் கோயில் கட்டிய விவகாரத்தில் பாஜ அரசு அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்ளது: பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ குற்றச்சாட்டு

 

திருவள்ளூர், பிப்.12: அரசியலமைப்பு சட்டத்தை மீறி பாஜ அரசு ராமர் கோயில் கட்டியுள்ளது என்று புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை சந்திக்க பணியை தொடங்கியுள்ளது. அதன்படி புரட்சி பாரதம் கட்சியும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புரட்சி பாரதம் கட்சி விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 தனித் தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்டு பெற முடிவு செய்துள்ளது.

அந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் புரட்சி பாரதம் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் வட மாவட்டங்களில் விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 நாடாளுமன்ற தனி தொகுதிகளில் புரட்சி பாரதம் பலமாக உள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இன்னும் அதிமுக தரப்பில் இருந்து அழைக்கப்படவில்லை. அடுத்த வாரம் அழைக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே 1996ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் புரட்சி பாரத கட்சியின் நிறுவனர் மறைந்த பூவை மூர்த்தியார் தனித்து நின்று 3ம் இடத்தை பிடித்தார். தொகுதி பங்கீடு முடிவடைந்த பிறகு எங்களது தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். மதம் என்பது கட்சிக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பாஜ அரசு அரசியலமைப்பு சட்டத்தை மீறி ராமர் கோயில் கட்டியுள்ளது. இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதால், அரசியல் வேறு, மதம் வேறு என்று தள்ளி இருந்தால்தான் சரியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு